ஐபிஎல்

ருதுராஜ் கெயிக்வாட் முதல் மூன்று ஆட்டங்களில் ரன்களே எடுக்க மாட்டாரா?

4th Apr 2022 12:14 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

படங்களில் பார்த்திருப்போம். கதாநாயகன் முதலில் அடி வாங்குவார். கீழு விழுவார். உயிர் போய் விடுமா என்று ரசிகர்கள் பயந்து போகும் சமயத்தில் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுப்பார்.

ருதுராஜின் கெயிக்வாடின் கதை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனிமேல் எந்தவொரு போட்டியிலும் அவரிடமிருந்து முதல் மூன்று ஆட்டங்களில் ரன்களை எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது. இப்படி எண்ணுமளவுக்குத் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார்.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் முதலிடம் பிடித்து அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். 

ADVERTISEMENT

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்தார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள். 

ஐபிஎல் 2020 போட்டியில் முதல் 3 ஆட்டங்களில் 0,5,0 என மோசமாகவே ஆரம்பித்தார். பிறகுதான் தன்னுடைய நிஜத் திறமையை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து மூன்று அரை சதங்கள் அடித்தார். இந்திய அணியில் இடம்பெறாத ஒரு வீரர் ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்தது அதுதான் முதல் தடவை. 6 ஆட்டங்களில் 204 ரன்கள் எடுத்த ருதுராஜ் 3 அரை சதங்கள் எடுத்தார். அப்போதே தோனி எதிர்பார்த்த தீப்பொறி, ருதுராஜிடம் தென்பட்டதால் 2021-ம் வருடமும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார்.

2021 ஐபிஎல் போட்டியின் ஆரம்பமும் ருதுராஜுக்குப் பிரமாதமாக அமையவில்லை. 5, 5, 10 என ரன்கள் எடுத்தார். உள்ளே உத்தப்பா வாய்ப்புக்குக் காத்துக்கொண்டிருந்ததால் சிஎஸ்கே அணி என்ன முடிவெடுக்கும் என்கிற ஆவல் ஏற்பட்டது. ஆனால் ருதுராஜுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்தார் தோனி. கொல்கத்தாவுக்கு எதிராக 64 ரன்கள் எடுத்தார். ரன் வேட்டை ஆரம்பமானது. இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றார். 

ஐபிஎல் 2021 முடிவில் 7 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றிருந்தார். 22 ஆட்டங்களிலேயே இத்தனை சிறப்பு. அதாவது கிட்டத்தட்ட 3 ஆட்டங்களுக்கு ஒருமுறை அந்தப் பட்டத்தைத் தன்வசமாக்கியிருந்தார். இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன்பு மைக்கேல் ஹஸ்ஸி, 4.92 ஆட்டங்களுக்கு ஒருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்றார் (59 ஆட்டங்களில் 12 விருதுகள்)

2019 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மட்டுமே தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. சின்ன கல்லு பெரிய லாபம். இதனால் இந்த வருடம் ருதுராஜை ஏலத்துக்கு முன்பே ரூ. 6 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது சிஎஸ்கே. வருங்கால சிஎஸ்கே கேப்டன் என்றும் பலர் அவரைப் புகழ்ந்து வந்தார்கள். 

சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த வருட ஜூலையில் தவன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ருதுராஜ், இரு ஆட்டங்களில் விளையாடினார். பிறகு கடந்த பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடினார்.

ருதுராஜின் இதுவரையிலான 3 ஐபிஎல் போட்டிகள், சர்வதேச ஆட்டங்கள் என எல்லாவற்றிலும் ஓர் ஒற்றுமை உண்டு. அவரால் முதல் மூன்று ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுக்கவே முடிவதில்லை. எதனால் ஒவ்வொரு முறையும் அவர் தடுமாறுகிறார் என்பது புதிராக உள்ளது. சிஎஸ்கேவில் வீரர்களின் திறமைக்கு முதலில் மதிப்பளிப்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக அவரால் மீண்டெழ முடிகிறது. தோல்விகளைச் சரிசெய்து ரன்கள் குவித்துப் பெயர் வாங்க முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தச் சலுகைகள் கிடைக்குமா?

சர்வதேச கிரிக்கெட்டிலும் 21, 14, 4 என முதல் மூன்று வாய்ப்புகளில் குறைவான ரன்களே எடுத்துள்ளார். ஏற்கெனவே இருக்கும் போட்டியில் இப்படி விளையாடினால் எப்படித் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்?

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மோசமாக விளையாடி முதல் மூன்று ஆட்டங்களிலும் தோற்றிருக்கிறது. மூன்றிலும் சேர்த்து மூன்று ரன்கள் கூட ருதுராஜ் எடுக்கவில்லை. 

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ருதுராஜ். அவர் மிக மிகத் திறமையான வீரர் என்பதில் யாருக்கும் வேறொரு கருத்து இருக்க முடியாது. கடந்த ஐபிஎல் போட்டியில் பும்ரா பந்தில் அவர் அடித்த சிக்ஸர் இன்னும் கண்ணில் நிற்கிறது. ஆனால் சரியான பயிற்சிகள் இல்லாமல் ஒவ்வொரு போட்டிக்குள்ளும் நுழைகிறாரா, ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்படுவதற்கு அவருடைய மனநிலை ஒரு காரணமா, தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்த மேலும் அவகாசம் தேவைப்படுகிறதா போன்ற கேள்விகளைக் கேட்டு அவர் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு நல்ல ஆலோசனைகள் சொல்ல நிபுணர்கள் பலர் உள்ளார்கள். இதைச் சரிசெய்யாவிட்டால் திறமையை வீணடித்த பழிசொல் அவர் மீதே விழும். 

ஒன்று மட்டும் நிச்சயம், அடுத்த வருடப் போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ருதுராஜ் பட்டையைக் கிளப்ப வேண்டும். அதற்கான சரியான ஏற்பாடுகள், மனநிலையுடன் அவர் விளையாட வரவேண்டும். முதல் மூன்று ஆட்டங்களில் சொதப்பும் நிலைமை இத்துடன் முடியட்டும். 

ருதுராஜின் முதல் 3 ஆட்டங்கள்: ஐபிஎல்

ஐபிஎல் 2020 - 0(1), 5(10) & 0(5)
ஐபிஎல் 2021 - 5(8), 5(16) & 10(13)
ஐபிஎல் 2022 - 0(4), 1(4) & 1(4)

ருதுராஜ்: சர்வதேச டி20 கிரிக்கெட்

21, 14, 4.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT