ஐபிஎல்

மீண்டும் பந்துவீசும் பாண்டியா: இர்பான் பதான் பாராட்டு

2nd Apr 2022 06:01 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் மீண்டும் பந்துவீசத் தொடங்கியிருக்கும் ஹார்திக் பாண்டியாவுக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கும் செல்லவில்லை. சமீபத்தில் இந்திய அணி விளையாடிய எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்து வீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வந்தார்.

2015-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் பாண்டியா. கடந்த வருடம் வரை மும்பை அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார். ஏழு வருடங்கள் விளையாடியதில் மும்பை அணி நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹார்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டியில் முழு உடற்தகுதியுடன் விளையாடுகிறார். இப்போது பந்துவீசவும் செய்வதால் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன. குஜராத் அணியின் முதல் ஆட்டத்தில் நான்கு ஓவர்களும் வீசினார் பாண்டியா. 

முன்னாள் வீரர் இர்பான் பதான், பாண்டியாவின் பந்துவீச்சு பற்றி கூறியதாவது:

பாண்டியா மீண்டும் பந்துவீசுவது நல்ல விஷயம். பந்தை வெளியிடும்போது அவர் அதிகமாகக் குனிவதில்லை. இதனால் முதுகுப்பகுதிக்கு அதிக அழுத்தம் தருவதில்லை. இதன் காரணமாக வேகத்தின் அளவு குறையலாம். போட்டியின் ஆரம்பத்தில் 2-3 ஓவர்கள் வீசுவது அவரிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பாண்டியா நன்கு செயலாற்றினால் கேப்டனாகவும் பாண்டியாவில் சிறப்பாகச் செயல்பட முடியும். கடந்த வருடம் ஏற்பட்ட வருத்தங்களில் இருந்து விடுபட்டு புதிதாக ஆரம்பித்துள்ளார் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT