ஐபிஎல்

சென்னை சிறப்பான பந்துவீச்சு: 134 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ஹைதராபாத்

30th Sep 2021 09:11 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 44-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இம்முறையும் ஜேசன் ராய் மற்றும் ரித்திமான் சஹா களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் பவுண்டரிகள் போகாத நிலையில், தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் சஹா இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடிக்கு மாறினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ராய் (2) விக்கெட்டை வீழ்த்தி ஜோஷ் ஹேசில்வுட் உதவினார்.

இதனால், பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ADVERTISEMENT

பவர் பிளே முடிந்தவுடன் டுவைன் பிராவோவை அறிமுகப்படுத்தினார் தோனி. இதற்குப் பலனாக கேப்டன் கேன் வில்லியம்சன் (11) விக்கெட் விழுந்தது. இதனால், ரன் ரேட் உயரவே இல்லை. 

சற்று நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய பிரியம் கர்க் விக்கெட்டையும் பிராவோ வீழ்த்தினார். தொடக்கம் விளையாடி வந்த சஹா பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய நேரத்தில் 44 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் வீழ்ந்தார்.

இதன்பிறகு, இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தத் தொடங்கினர். ஆனால், 17-வது ஓவரை வீசிய ஹேசில்வுட் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமத் இருவரையும் தலா 18 ரன்களுக்கு வீழ்த்தி அசத்தினார். அடுத்த ஓவரை பிராவோ சிறப்பாக வீச, 19-வது ஓவரில் ஜேசன் ஹோல்டர் (5) விக்கெட்டைக் கைப்பற்றினார் ஷர்துல் தாக்குர். எனினும், தாக்குர் ஓவரில் ஹைதராபாத் 11 ரன்கள் சேர்த்தது.

தீபக் சஹார் வீசிய கடைசி ஓவரை ரஷித் கான் பவுண்டரி அடித்து தொடங்கினார். எனினும், மற்ற பந்துகள் வீசப்பட்டதால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஷித் கான் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். 

சென்னை தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

Tags : Chennai Super Kings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT