ஐபிஎல்

ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்: மும்பையை வென்றது பெங்களூரு

26th Sep 2021 11:27 PM

ADVERTISEMENT


ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க | டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள்: கோலி சாதனை!

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் பெரிதளவில் ரன் போகவில்லை. இதன்பிறகு, கைல் ஜேமிசன் வீசிய மூன்றாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடக்கி வைத்தார் ரோஹித். இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

பவர் பிளே முடிந்தவுடன் யுஸ்வேந்திர சஹாலை அறிமுகப்படுத்தினார் கேப்டன் விராட் கோலி. முதல் விக்கெட்டாக டி காக்கை 24 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து கேப்டனின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் சஹால். இதன்பிறகு, இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். ரோஹித் ஆட்டத்தைக் கையிலெடுக்க முயற்சித்து சிக்ஸர் அடித்தார்.

கிளென் மேக்ஸ்வெல் ஓவரில் கிஷன் அடித்த பந்து மறுமுனையில் ரோஹித் கையைப் பதம் பார்த்தது. அந்த வலியிலிருந்து திரும்பிய ரோஹித் அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயன்று பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். அவர் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, எந்தவொரு வீரரும் இரட்டை இலக்கு ரன்களை அடையவில்லை. வரிசையாக அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். கிஷனை சஹாலும், சூர்யகுமார் யாதவை முகமது சிராஜும், கிருனால் பாண்டியாவை மேக்ஸ்வெலும் வீழ்த்தினர். இதனால், பொறுப்பு கைரன் பொல்லார்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா வசம் சென்றது. கடைசி 4 ஓவர்களில் 61 ரன்கள் தேவைப்பட்டன.

இந்த நிலையில் ஹர்ஷல் படேல் 17-வது ஓவரை வீசினார். 2-வது பந்தில் பாண்டியாவையும், 3-வது பந்தில் பொல்லார்டையும், 4-வது பந்தில் ராகுல் சஹாரையும் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ஹர்ஷல்.

அடுத்த ஓவரில் ஜாஸ்பிரித் பும்ராவை சஹாலும், 19-வது ஓவரில் ஆடம் மில்ன் விக்கெட்டை ஹர்ஷலும் வீழ்த்த மும்பை அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : Harshal Patel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT