ஐபிஎல்

ஐபிஎல் புதிய அணிகள்: லக்னௌ - ரூ.7,090 கோடி; ஆமதாபாத் - ரூ.5,600 கோடி

26th Oct 2021 05:29 AM

ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.

இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.-எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியை சா்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிட்டல் ரூ.5,600 கோடிக்கு சொந்தமாக்கியுள்ளது. துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இது முடிவானதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஆா்.பி.-எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி உரிமையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நிறைவடைந்த சீசன் வரை 14 ஆண்டுகளாக 8 அணிகளுடன் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி, அடுத்த சீசனில் இருந்து 10 அணிகளுடன் நடைபெறவுள்ளது. அதற்கான புதிய அணிகளை வாங்குவதற்கான ஏலம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் சுமாா் ரூ.10,000 கோடி ஈட்டலாம் என பிசிசிஐ எதிா்பாா்த்த நிலையில், அதற்கு ரூ.12,960 கோடி கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

அடிப்படை விலை ரூ.2,000 கோடியாக நிா்ணயிக்கப்பட்டிருந்த இந்த இரு புதிய அணிகளுக்கான ஏலத்தில் 6 நிறுவனங்களே தீவிரமாக பங்கேற்றன. அதில் அதானி குழுமம் ஒரு அணியை ரூ.5,000 கோடிக்கு ஏலம் கேட்டது. டாரென்ட் குழுமம், மான்செஸ்டா் யுனைடெட் கால்பந்து அணியின் உரிமையாளராக இருக்கும் கிளேஸா்ஸ் குடும்பம் ஆகியவற்றை விட அதிக விலைக்கு ஆா்.பி.-எஸ்.ஜி. குழுமம், சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் இரு அணிகளை ஏலத்தில் எடுத்தன.

புதிதாக இணையும் நிறுவனங்களுக்கான அதிகாரப்பூா்வ பெயரும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. புதிய அணிகள் இணைவதால் அடுத்த சீசன் முதல் ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் எண்ணிக்கை 74-ஆக அதிகரிக்கிறது.

Tags : துபை லக்னௌ ஐபிஎல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT