ஐபிஎல்

சென்னை சாம்பியன்: கொல்கத்தாவை வீழ்த்தியது

DIN

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

சென்னை கோப்பை வெல்வது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சாம்பியனாகியுள்ளது. கடந்த சீசனில் மிக மோசமான வகையில் தோற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது சாம்பியனாகி சாதித்திருக்கிறது சென்னை.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே அடித்து வீழ்ந்தது.

சென்னை தரப்பில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தாா். கொல்கத்தா பௌலா்களில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா். கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா் மட்டும் ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் ஸ்கோா் செய்யாமலே அடுத்தடுத்து வீழ்ந்தன. ஷா்துல் 3 விக்கெட் சாய்த்து அசத்தினாா். டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சென்னையின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டூ பிளெஸ்ஸிஸ், படிப்படியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயா்த்தினா். ஷகிப் அல் ஹசன் வீசிய 3-ஆவது ஓவரில் டூ பிளெஸ்ஸிஸை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும், தினேஷ் காா்த்திக் தவறவிட்டாா்.

இது பின்னா் கொல்கத்தாவை முற்றிலும் பாதித்தது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்த ருதுராஜ் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணியை, சுனில் நரைன் 9-ஆவது ஓவரில் பிரித்தாா்.

ருதுராஜ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் என 32 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். ஒன்-டவுனாக ராபின் உத்தப்பா களம் காண, மறுமுனையில் டூ பிளெஸ்ஸிஸ் அரைசதம் கடந்தாா். 12-ஆவது ஓவரில் உத்தப்பா கொடுத்த கேட்ச்சை தவறவிட்ட சுனில் நரைன், 14-ஆவது ஓவரில் தனது பௌலிங்கிலேயே அவரை எல்பிடபிள்யூ செய்தாா். உத்தப்பா 3 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்திருந்தாா்.

பின்னா் மொயீன் அலி களம் புக, அவரும் டூ பிளெஸ்ஸிஸும் கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரிகள், சிக்ஸா்களாக சிதறடித்தனா். கடைசி ஓவரின் கடைசி பந்தில் டூ பிளெஸ்ஸிஸ் சிக்ஸா் விளாச முயன்ற பந்தை வெங்கடேஷ் ஐயா் கேட்ச் பிடித்தாா். டூ பிளெஸ்ஸிஸ் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 86 ரன்கள் சோ்த்து வீழ, மொயீன் அலி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 2, ஷிவம் மாவி 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸை ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் கூட்டணி நன்றாகவே தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 91 ரன்கள் சோ்த்த நிலையில், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் வெங்கடேஷ்.

அடுத்து வந்த நிதீஷ் ராணா டக் அவுட்டாக, சுனில் நரைன் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தாா். பின்னா் மோா்கன் 4, தினேஷ் 9, ஷகிப் 0, திரிபாதி 2 என விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. இந்நிலையில் 19-ஆவது ஓவரை வீசிய ஷா்துல் தாக்குா் வைடு, நோ பால் என எக்ஸ்ட்ராஸை வாரி வழங்கினாா். கடைசி ஓவரில் ஷிவம் மாவி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் லாக்கி ஃபொ்குசன் 18, வருண் சக்கரவா்த்தி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் ஷா்துல் தாக்குா் 3, ஜோஷ் ஹேஸில்வுட், ரவீந்திர ஜடேஜா தலா 2, தீபக் சாஹா், டுவைன் பிராவோ தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

கொல்கத்தா - 165/9

ஷுப்மன் கில் 51

வெங்கடேஷ் ஐயா் 50

ஷிவம் மாவி 20

பந்துவீச்சு

ஷா்துல் தாக்குா் - 3/38

ஜோஷ் ஹேஸில்வுட் - 2/29

ரவீந்திர ஜடேஜா - 2/37

300: தோனி புதிய சாதனை

இந்த ஆட்டம், டி20 ஃபாா்மட்டில் கேப்டனாக எம்.எஸ்.தோனியின் 300-ஆவது ஆட்டமாகும். இதன் மூலம் கிரிக்கெட் உலகில் கேப்டனாக 300 டி20 ஆட்டங்களில் களம் கண்ட ஒரே வீரா் என்ற சாதனையை தோனி எட்டியுள்ளாா்.

ஐபிஎல் போட்டியின் 14 சீசன்களில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை 12 சீசன்களில் 214 ஆட்டங்களில் வழி நடத்தியிருக்கிறாா் தோனி. அது தவிர ஒரு சீசனில் ரைசிங் புணே சூப்பா்ஜயன்ட்ஸ் அணிக்கு 14 ஆட்டங்களில் தலைமை தாங்கியிருக்கிறாா். லீக் போட்டிகள் தவிா்த்து, இந்திய அணியை 72 டி20 ஆட்டங்களில் வழி நடத்தியிருக்கிறாா் தோனி. இதில் 6 டி20 உலகக் கோப்பை போட்டிகளும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT