ஐபிஎல்

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்: இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுமா?

4th May 2021 03:48 PM

ADVERTISEMENT

 

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. எனினும் கொல்கத்தா, சென்னை, தில்லி ஆகிய அணிகளின் வீரர்களும் நிர்வாகிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரும். ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 2021 டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. இதனால் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு பிசிசிக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ அமைப்பைச் சேர்ந்த திரஜ் மல்ஹோத்ரா கூறியதாவது: டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இயக்குநர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன். ஒருவேளை நிலைமை இதேபோல நீடித்தால் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படும். அங்கு நடந்தாலும் போட்டியை பிசிசிஐ தான் நடத்தும் என்றார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இன்னும் 5 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இந்தியாவின் தற்போதைய நிலவரம் ஐசிசியை யோசிக்க வைக்கும் எனத் தெரிகிறது. ஐபிஎல் போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனதால் டி20 உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவில் நடத்த ஐசிசி சம்மதிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் நன்கு குறைந்தால் மட்டுமே டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும். இல்லாவிட்டால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதைத் தவிர பிசிசிஐக்கும் ஐசிசிக்கும் வேறு வழி இருக்காது. 

Tags : T20 World Cup IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT