ஐபிஎல்

ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைப்பு: பிசிசிஐ

4th May 2021 01:17 PM

ADVERTISEMENT

 

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

ADVERTISEMENT

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த ஆட்டமும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் ஆட்டமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT