ஐபிஎல்

பயிற்சியாளர் எல். பாலாஜிக்கு கரோனா: சிஎஸ்கே ஆட்டம் ஒத்திவைப்பு

4th May 2021 11:58 AM

ADVERTISEMENT

 

சிஎஸ்கே அணியைச் சேர்ந்த இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நாளைய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ அறிவித்தது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்று (திங்கள்கிழமை) இரவில் மோத இருந்த ஆட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

மிகக் கடுமையான கரோனா பாதுகாப்பு வளையத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இதுவரை சுமூகமாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் தற்போதைய நிகழ்வுகளால் ஆட்ட அட்டவணையில் பல மாறுதல்கள் ஏற்படவுள்ளன.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளா் எல்.பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிஎஸ்கே அணியும் ட்விட்டர் வழியாக அறிவித்துள்ளது. எல். பாலாஜியும் பேருந்துப் பராமரிப்பாளரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து தில்லியில் நாளை நடைபெறவிருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தின்போது டக்அவுட் எனப்படும் வீரர்களுக்கான பகுதியில் சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து எல். பாலாஜி அமர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது சிஎஸ்கேவின் அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏழு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சிஎஸ்கே வீரர்களால் தங்கள் விடுதி அறையை விட்டு வெளியே வரமுடியும் எனத் தெரிகிறது. திங்கள் அன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai Super Kings May 5
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT