ஐபிஎல்

ஐபிஎல் ஒத்திவைப்பு: சொந்த நாட்டில் நுழைய தடை, மாலத்தீவுக்குச் செல்லும் ஆஸி. வீரர்கள்!

4th May 2021 05:36 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாத சூழலில் ஆஸி. வீரர்கள் அனைவரும் மாலத்தீவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. எனினும் கொல்கத்தா, சென்னை, தில்லி ஆகிய அணிகளின் வீரர்களும் நிர்வாகிகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரும். ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியப் பயணிகள் விமானங்களுக்குப் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு எப்படித் திரும்புவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

ADVERTISEMENT

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள், தங்களுடைய சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிசிசிஐயிடம் தொடர்பு கொண்டு வருகிறோம். இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு மே 15 வரை தடை விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கென தனியாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க மாட்டோம் எனக் கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேடர், சில நாள்களுக்கு முன்பு கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி மாலத்தீவுக்குச் சென்றார். ஆஸ்திரேலிய நாட்டுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆஸி. பிரதமரைக் கண்டித்து பேட்டியளித்தார். 

இந்நிலையில் ஸ்லேடர் வழியைப் பின்பற்றி ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் எனக் கிட்டத்தட்ட 40 பேரும் மாலத்தீவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து நேராக மாலத்தீவுக்குச் சென்று பிறகு மே 15-க்குப் பிறகு மாலத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags : Australia IPL maldives
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT