ஐபிஎல்

தவான் மீண்டும் அரைசதம்: டெல்லி மீண்டும் வெற்றி

2nd May 2021 11:01 PM

ADVERTISEMENT


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த இணை வழக்கம்போல் டெல்லிக்கு நல்ல அதிரடி தொடக்கத்தை அமைத்து தந்தது.

இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

பவர் பிளே முடிந்தவுடன் ஹர்ப்ரீத் பிரார் வீசிய முதல் பந்திலேயே பிரித்வி ஷா 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரன் ரேட் சற்று குறைந்தது. 10 ஓவர்களில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.

தவானுடன் இணைந்து பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்ற வேண்டிய தருணத்தில் ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுக்கு ரைலே மெரெடித் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால், அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி வெற்றிக்கு 7 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

எனினும், ஸ்மித் ஆட்டமிழந்தவுடன் ரவி பிஷ்னாய் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து தவான் மிரட்டினார். அதேசமயம், 35-வது பந்தில் அரைசதத்தையும் எட்டினார் தவான். அரைசதம் அடித்த பிறகு வெற்றி இலக்கை துரிதமாக அடையத் தொடங்கினார். 

ஆனால், கேப்டன் ரிஷப் பந்த் அதே அவசரத்தில் 14 ரன்களுக்கு கிறிஸ் ஜோர்டனிடம் விக்கெட்டை இழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெத்மயர் மெரெடித் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியைப் பறக்கவிட்டு வெற்றியை எளிதாக்கினார். 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் 2 ரன்கள் மட்டுமே என்றபோது மெரெடித் 2 வைட் பந்துகளைப் போட்டு டெல்லி வெற்றியை உறுதி செய்தார். 

17.4 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 47 பந்துகளில் 69 ரன்களும், ஹெத்மயர் 4 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT