ஐபிஎல்

கட்டுக்கடங்காத பிரித்வி ஷா: டெல்லி மிரட்டல் வெற்றி

29th Apr 2021 10:52 PM

ADVERTISEMENT


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது.

155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரை ஷிவம் மவி வீசினார். முதல் பந்து வைடாகப் போக 1 ரன் கிடைத்தது. அடுத்த 6 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி கொல்கத்தாவை மனதளவில் சிதைத்தார் பிரித்வி. இந்த அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு கொல்கத்தா பந்துவீச்சாளர்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரித்வி ஷா ஆட்டத்தைப் பார்த்து ஷிகர் தவான், பாட்னர்ஷிப்புக்கு மட்டும் ஒத்துழைத்து அடக்கி வாசித்தார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களால் பிரித்வியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

ADVERTISEMENT

பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் குவித்தது. பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ் 1 ரன் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், கம்மின்ஸ் என கொல்கத்தாவுக்கு எந்தப் பந்துவீச்சாளரைப் பயன்படுத்தியும் பலனில்லை. பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்தது.

இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 6-க்குக் கீழ் குறையத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 100-ஐத் தாண்டி விளையாடி வந்த இந்த இணையை கொல்கத்தாவால் பிரிக்க முடியவில்லை.

கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸர் அடித்து தவானும் அதிரடிக்கு மாற முயற்சித்தார். ஆனால், அதே ஓவரில் அவர் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தவான் ஆட்டமிழக்கும்போது டெல்லி வெற்றிக்கு 37 பந்துகளில் 23 ரன்களே தேவை என்ற நிலை இருந்ததால் கேப்டன் ரிஷப் பந்த் முன்கூட்டியே களமிறங்கி துரிதமாக இலக்கை அடைய முயற்சித்து அதிரடி காட்டினார்.

பிரித்வி, பந்த் இணையே வெற்றி இலக்கை அடையும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் கம்மினிஸின் அடுத்த ஓவரில் பிரித்வி ஷா 82 ரன்களுக்கு (41 பந்துகள்) ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பந்தும் 16 ரன்கள் (8 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

ஆனால், அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஷிம்ரான் ஹெத்மயர் டெல்லி வெற்றியை உறுதி செய்தனர்.

16.3 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

Tags : Prithvi Shaw
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT