ஐபிஎல்

டு பிளெஸ்ஸி, ருதுராஜ் அதிரடி: 220 ரன்கள் குவித்தது சென்னை

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். பேட் கம்மின்ஸ் வீசிய 2-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 1 பவுண்டரி, ருதுராஜ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க சென்னையின் அதிரடி தொடங்கியது.

சுழற்பந்துவீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஓவர்களில் மட்டும் கவனமாக விளையாடி, வேகபந்துவீச்சில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பவர் பிளே முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் சேர்த்தது.

இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது.

கம்லேஷ் நாகர்கோடி வீசிய 11-வது ஓவரில் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்து மிரட்டினர். அதே சமயம், ருதுராஜும் இந்த ஓவரில் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

டு பிளெஸ்ஸியும் அரைசதத்தை எட்டும் நேரத்தில் சுழற்பந்துவீச்சிலும் அதிரடி காட்ட முயன்று வருணிடம் விக்கெட்டை இழந்தார் ருதுராஜ். அவர் 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார்.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, அதே ஓவரில் பவுண்டரி அடித்த டு பிளெஸ்ஸி 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துத் தந்ததால், டு பிளெஸ்ஸி மற்றும் அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர்.

இதனால், 16-வது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது.

நரைன் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த  மொயீன் அலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, டு பிளெஸ்ஸியுடன் கேப்டன் மகேந்திர சிங் தோனி இணைந்தார். நரைன் ஓவரிலும், பிரசித் ஓவரிலும் பேட்டில் சரியாக படாமல் பவுண்டரிகள் கிடைத்தாலும், பிரசித் ஓவரின் கடைசி பந்தில் அசத்தலாக சிக்ஸர் அடித்தார் தோனி.

ஆண்ட்ரே ரஸல் வீசிய 19-வது ஓவரில் டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் தோனி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் 3 பந்துகளில் டு பிளெஸ்ஸி 1 சிக்ஸர் மட்டுமே அடிக்க 6 ரன்கள் கிடைத்தன. 4-வது பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் டு பிளெஸ்ஸி. இதனால், 2 பந்துகள் மீதமிருக்க அவர் 94 ரன்களை எட்டினார். ஆனால், 5-வது பந்தில் அவரால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா கொடுத்த கேட்ச் வாய்ப்பை நிதிஷ் ராணா தவறவிட்டு சிக்ஸராக மாற்றினார்.

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டு பிளெஸ்ஸி 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT