ஐபிஎல்

பயம் காட்டிய கம்மின்ஸ், ரஸல்: இறுதியில் சிஎஸ்கே 'த்ரில்' வெற்றி

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.

221 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் (0) விக்கெட்டை வீழ்த்தி தீபக் சஹார் அசத்தினார். அடுத்த ஓவரில் ராணா (9) விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து தனது 3-வது ஓவரில் இயான் மார்கன் (7), சுனில் நரைன் (4) விக்கெட்டுகளை வீழ்த்தி சஹார் மிரட்டலைத் தொடர்ந்தார்.

இந்த சரிவிலிருந்த மீள்வதற்குள் என்கிடி வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் ராகுல் திரிபாதியும் (8) ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், ஆண்ட்ரே ரஸல் களமிறங்கிய வேகத்திலேயே பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.

சஹார் வீசிய 8-வது ஓவரில் ரஸல் ஒரு சிக்ஸர், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர் விளாச ரன் ரேட் உயரத் தொடங்கியது. ஷர்துல் தாக்குர் வீசிய 10-வது ஓவரில் ரஸல் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாச 24 ரன்கள் கிடைத்தன.

இதனால், ஒரு கட்டத்தில் மோசமான நிலையிலிருந்த கொல்கத்தா திடீரென 10 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை எட்டியது.

ரவீந்திர ஜடேஜாவின் அடுத்த ஓவரில் ஃப்ரீ ஹிட்டைப் பயன்படுத்தி சிக்ஸரைப் பறக்கவிட்ட ரஸல் 21-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், சாம் கரண் வீசிய அடுத்த ஓவரிலேயே ரஸல் (54) போல்டாகி ஆட்டமிழந்தார்.

எனினும், தினேஷ் கார்த்திக் அதே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.

மறுமுனையில் பேட் கம்மின்ஸும் ஷர்துல்  ஓவரில் 2 பவுண்டரிகள், என்கிடி ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

ஆனால், என்கிடியின் அதே ஓவரில் கார்த்திக் (40) ஆட்டமிழந்தார்.

இதனால், மீண்டும் ஆட்டம் முடிவுக்கு வந்தது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முறை ஆட்டத்தைக் கையிலெடுத்தார் கம்மின்ஸ்.

கார்த்திக் விக்கெட் விழுந்து அடுத்த ஓவரை கரண் வீசினார். அதில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் கம்மின்ஸ். இதையடுத்து, ஹாட்ரிக் சிக்ஸர்கள். 5-வது பந்தில் பவுண்டரி அடித்து கடைசி பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் கம்மின்ஸ். அந்த ஓவரில் 30 ரன்கள் கிடைக்க, கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 45 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், என்கிடி 17-வது ஓவரை சிறப்பாக வீசி 5 ரன்களை மட்டும் கொடுத்து நாகர்கோடி விக்கெட்டை வீழ்த்தினார்.

ஷர்துல் 1 பவுண்டரி, 2 வைட் என மொத்தம் 12 ரன்களைக் கொடுக்க கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தாவுக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. அதே ஓவரில் கம்மின்ஸும் தனது 23-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

19-வது ஓவரை மீண்டும் கரண் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு கம்மின்ஸ் மீண்டும் மிரட்டினார். ஆனால், அடுத்த பந்தில் 2-வது ரன் எடுக்க முயற்சித்து வருண் சக்ரவர்த்தி விக்கெட்டை இழந்தார். அந்த ஓவரில் அதன்பிறகு பவுண்டரிகள் போகவில்லை.

இதனால், கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. ஷர்துல் பந்துவீச கம்மின்ஸ் ஸ்டிரைக்கில் இருந்தார். முதல் பந்தில் இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்தபோது பிரசித் கிருஷ்ணா ஆட்டமிழந்தார்.

19.1 ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT