ஐபிஎல்

பரபரப்பான ஐபிஎல் ஆட்டம்: ஒரு ரன் ஓடாமல் இருந்த சஞ்சு சாம்சனின் செயல் சரியா?

13th Apr 2021 11:41 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 50 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 91 ரன்களும் கெயில் 28 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களும் தீபக் ஹூடா 28 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 64 ரன்களும் எடுத்தார்கள்.

இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை அடைந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். 

ADVERTISEMENT

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் சஞ்சு சாம்சன். இதனால் கடைசி இரு பந்துகளில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது அர்ஷ்தீப் வீசிய பந்தை லாங் ஆஃப் பகுதியில் அடித்தார் சஞ்சு சாம்சன். ஒரு ரன் தான் கிடைக்கும் என்பதால் சிங்கிள் ரன்னை ஓட மறுத்துவிட்டார். இதனால் மறுமுனையில் இருந்து ஓடோடி வந்த கிறிஸ் மோரிஸ் மீண்டும் திரும்பிச் சென்றார். தன்னால் ஒரு சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார் சஞ்சு சாம்சன். அதனால் அவர் அந்த சிங்கிளை மறுத்து கடைசிப் பந்தை எதிர்கொள்ளத் தயாரானார். ஆனால் கடைசிப் பந்தில் டீப் கவர் பகுதியில் சிக்ஸர் அடிக்க முயன்று, எல்லைக்கோட்டுக்கு அருகே ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

5-வது பந்தில் சிங்கிள் ரன்னை ஓடாமல் இருந்த சஞ்சு சாம்சனின் செயல் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அந்த ரன்னை அவர் ஓடியிருந்தால் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தாலே வெற்றி என்கிற நிலை உருவாகியிருக்கும். கிறிஸ் மோரிஸ் அந்த பவுண்டரியை அடித்திருந்தால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்கும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.

எனினும் ஆட்டத்தின் சூழலைப் பார்க்கும்போது சஞ்சு சாம்சனின் செயலைச் சரியென்றே கூற முடியும். 

வான்கடே சிறிய மைதானம். அதனால் தான் நேற்றைய ஆட்டத்தில் சிக்ஸர்கள் பறந்தன. இரு அணிகளும் 200 ரன்களுக்கு அதிகமாக அடித்தன. 5-வது பந்தில் எவ்வளவு வேகமாகவும் அடித்திருந்தாலும் எவ்வளவு வேகமாக ஓடியிருந்தாலும் சஞ்சு சாம்சனால் இரண்டு ரன்களை எடுத்திருக்க முடியாது. கடைசிப் பந்தை கிறிஸ் மோரிஸ் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர் 4 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்கள் தான் எடுத்திருந்தார். இதனால் மோரிஸை விடவும் தன்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என சஞ்சு சாம்சன் நம்பியதில் தவறே இல்லை. மிகுந்த தன்னம்பிக்கையும் சூழலைப் புரிந்துகொண்ட ஒரு வீரரால் மட்டுமே நெருக்கடியான தருணத்தில் இதுபோன்ற துணிச்சலான ஒரு முடிவை எடுக்க முடியும்.

சஞ்சு சாம்சனின் துரதிர்ஷ்டம், அவரால் கடைசிப் பந்தை சிக்ஸர் அடிக்க முடியாமல் போனது. எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விளையாட்டில் வீரதீரச் செயல்களுக்கு எப்போதும் இடமுண்டு, அவைதான் வரலாற்றில் இடம்பெறும். அப்படியொரு செயலைச் செய்து ஐபிஎல் வரலாற்றிலும் ரசிகர்களின் நினைவுகளிலும் வலுவான இடத்தைப் பிடித்துவிட்டார் சஞ்சு சாம்சன்.

Tags : Sanju Samson finish
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT