ஐபிஎல்

கேப்டன் சஞ்சு சதம் வீண்: கடைசி பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி

12th Apr 2021 11:43 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் கடைசி பந்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

222 ரன்கள் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் மனன் வோரா களமிறங்கினர்.

பஞ்சாப் சிறப்பான தொடக்கம்:

இன்னிங்ஸின் 3-வது பந்திலேயே ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் முகமது ஷமி பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் வோரா சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து அதிரடி காட்டினார். ஆனால், அவரும் ஆர்ஷ்தீப் சிங் வேகத்தில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 25 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

ADVERTISEMENT

பட்லர் பதிலடி:

இதையடுத்து, சஞ்சு சாம்சனுடன் இணைந்த ஜோஸ் பட்லர், ரைலே மெரெடித் வீசிய 5-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விரட்டி நெருக்கடியை பஞ்சாப் பக்கம் திருப்பினார். இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி 59 ரன்களை எட்டியது.

ஆனால், ரிச்சர்ட்சன் பந்தில் பட்லர் 25 ரன்களுக்கு போல்டானார். விக்கெட்டுகள் சரிந்தாலும் சாம்சன் பொறுப்பான கேப்டனாக பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்து வந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, சாம்சனுக்கு ஒத்துழைப்பு தந்து பாட்னர்ஷிப் அமைத்தார்.

இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதனிடையே மெரெடித் ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்த சாம்சன் 33-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய இக்கட்டான நேரத்தில் துபே 23 ரன்களுக்கு அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார்.

திருப்புமுனை பாட்னர்ஷிப்:

அடுத்து களமிறங்கிய ரியான் பராக் முதல் பந்திலிருந்து அதிரடியை வெளிப்படுத்தினார். சாம்சனும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 

கடைசி 7 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 94 ரன்கள் தேவைப்பட்டன. தேவைக்கேற்ப அடுத்த 2 ஓவர்களில் தலா 13 ரன்கள் எடுத்தது சாம்சன் - பராக் இணை.

இந்த நிலையில் முருகன் அஸ்வின் 16-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் சாம்சன் ஒரு சிக்ஸர், பராக் 2 சிக்ஸர்கள் விளாச 20 ரன்கள் கிடைத்தன. இதனால், கடைசி 4 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பதால் ஷமியின் கடைசி ஓவரை 17-வது ஓவரிலேயே பயன்படுத்தினார் ராகுல். அதற்குப் பலனாக பராக் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்த இணை 26 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தது.

கேப்டனாக முதல் போட்டியில் சதம்:

இதையடுத்து, கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டன. ரிச்சர்ட்சன் வீசிய 18-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் முறையே பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி விளாசிய சாம்சன் தனது 54-வது பந்தில் சதத்தை எட்டினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்ததால் கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

19-வது ஓவரை வீசிய மெரேடித் முதல் பந்திலேயே ராகுல் தெவாதியா விக்கெட்டை வீழ்த்தினார். 4-வது பந்தில் மட்டும் சாம்சன் ஒரு சிக்ஸர் அடித்தார். மற்றபடி ரன்கள் போகாததால் ராஜஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை:

இதனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. இரண்டாவது பந்தில் சாம்சன் 1 ரன் எடுத்தார். 3-வது பந்தில் கிறிஸ் மாரிஸ் 1 ரன் எடுக்க கடைசி 3 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால், 4-வது பந்தை சாம்சன் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு அசத்தினார். 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த பந்தை சாம்சன் லாங் ஆஃப் திசைக்கு அனுப்பியும் ரன் ஓடவில்லை. இதனால், கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால், பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயன்று பவுண்டரி எல்லையில் சாம்சன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கடைசி பந்தில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார். 

பஞ்சாப் அணித் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட்சன், மெரெடித் தலா 1 விக்கெட்டைையும் வீழ்த்தினர்.

 

 

    

Tags : Sanju Samson
ADVERTISEMENT
ADVERTISEMENT