ஐபிஎல்

ராகுல், ஹூடா விளாசல்: ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு

12th Apr 2021 09:30 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். 

ஐபிஎல்-இல் முதல் விக்கெட்:

முதலிரண்டு ஓவர்களில் நல்ல தொடக்கம் அமைந்தாலும் சேத்தன் சர்காரியா வீசிய 3-வது ஓவரில் அகர்வால் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவரது முதல் விக்கெட்டாகும்.

ADVERTISEMENT

இதையடுத்து, கிறிஸ் கெயில் மற்றும் ராகுல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர் பிளே முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது.

கெயில் அதிரடி:

பவர் பிளேவுக்குப் பிறகு இருவரும் ரன் ரேட்டை உயர்த்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன் ரேட் ஓவருக்கு படிப்படியாக 9-ஐத் தொட்டது.

பெரிய இன்னிங்ஸை விளையாட முற்பட்ட கெயில் 40 ரன்களுக்கு ரியான் பராக் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹூடா - ராகுல் சிக்ஸர் மழை:

இதையடுத்து, நிகோலஸ் பூரன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் ஹூடா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ராகுல் மற்றும் ஹூடா இருவரும் பவுண்டரிகளிலும் சிக்ஸர்களிலுமே ரன் குவிக்கத் தொடங்கினர்.

ஷிவம் துபே பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல் 30-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அதே ஓவரில் ஹூடா 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். ஷ்ரேயஸ் கோபால் வீசிய அடுத்த ஓவரில் ஹூடா மட்டுமே 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

அடுத்தடுத்த ஓவர்களிலும் சிக்ஸர்கள் பறந்தன. இதன்மூலம், ஹூடா 20-வது பந்திலேயே அரைசதத்தை எட்டினார். அதேசமயம் அணியின் ரன் ரேட்டும் ஓவருக்கு 10-ஐத் தாண்டியது.

இந்த இணை கடைசி கட்டத்திலும் வானவேடிக்கை காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிறிஸ் மாரிஸ் வீசிய 18-வது ஓவரில் ஹூடா 64 (28 பந்துகள், 4 பவுண்டரி, 6 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

ராகுல் - ஹூடா இணை 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய பூரனும் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் ராகுல் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த அணி 18-வது ஓவரிலேயே 200 ரன்களைத் தாண்டியது.

கடைசி ஓவரில் சதத்தை தவறவிட்ட ராகுல்:

கடைசி ஓவரில் ராகுல் சதமடிக்க 13 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியுடன் தொடங்கினார். ஆனால், அடுத்த பந்திலேயே ராகுல் தெவாதியாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 91 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு கடைசி ஓவரில் பவுண்டரிகள் அடிக்கப்படவில்லை.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் சர்காரியா 3 விக்கெட்டுகளையும், மாரிஸ் 2 விக்கெட்டுகளையும், பராக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : KL rahul
ADVERTISEMENT
ADVERTISEMENT