ஐபிஎல்

ராணா, திரிபாதி அதிரடி அரைசதம்: ஹைதராபாத்துக்கு 188 ரன்கள் இலக்கு

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. 

14-வது ஐபிஎல் சீசனின் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

பவர் பிளே:

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ராணா பவுண்டரி அடித்து கொல்கத்தா ரன் கணக்கைத் தொடங்கினார். கில்லும் அவருடன் இணைந்து பவுண்டரிகளாக விளாச பவர் பிளே முடிவில் கொல்கத்தா விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தது.

முதல் ஓவரிலேயே ரஷித் விக்கெட்:

பவர் பிளே முடிந்தவுடன் ரஷித் கான் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் முதல் ஓவரிலேயே கில்லை (15 ரன்கள்) போல்டாக்கி வெளியேற்றினார்.

ராணா - திரிபாதி அதிரடி பாட்னர்ஷிப்: 

தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 2-வது பந்திலேயே சிக்ஸரைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

ராணா மற்றும் திரிபாதி அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்து ரன் ரேட்டை படிப்படியாக ஓவருக்கு 9 ஆக உயர்த்தத் தொடங்கினர். விஜய் சங்கர் பந்தில் சிக்ஸர் அடித்த ராணா 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்த இணை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் விளையாடியது ஹைதராபாத்துக்கு பிரச்னையை உண்டாக்கியது. இதனிடையே திரிபாதியும் தனது 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்:

ஆனால், அரைசதம் அடித்த திரிபாதி (29 பந்துகள் 53 ரன்கள்) அடுத்த பந்திலேயே நடராஜனிடம் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரஷித் கானிடம் ஆட்டமிழந்தார்.

முகமது நபி வீசிய 18-வது ஓவரில் அரைசதம் அடித்து விளையாடி வந்த ராணா 56 பந்துகளில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் இயான் மார்கனும் (2) ஆட்டமிழந்தார்.

கடைசி 2 ஓவர்கள்:

இந்த நிலையில் நடராஜன் 19-வது ஓவரை வீசினார். அனைத்துப் பந்துகளையும் யார்க்கராக வீசியதால் ஒரு பவுண்டரி மட்டுமே போக கொல்கத்தா 9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் முதலிரண்டு பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் தொடங்கினார் தினேஷ் கார்த்திக். அதன்பிறகு அந்த ஓவரில் பவுண்டரிகள் போகவில்லை. கடைசி பந்தில் ஷகிப் அல் ஹசன் (3) ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. 

ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளையும், நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT