சர்வதேச கிரிக்கெட் ஓய்வை தள்ளிப்போட்டார் கிறிஸ் கெயில்

உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த கிறிஸ் கெயில், தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
சர்வதேச கிரிக்கெட் ஓய்வை தள்ளிப்போட்டார் கிறிஸ் கெயில்


உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த கிறிஸ் கெயில், தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளின் மூத்த வீரரான கிறிஸ் கெயில், இந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நாளைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. 

இந்த நிலையில், கிறிஸ் கெயில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,    

"இது முடிவல்ல. எனக்கு இன்னும் சில ஆட்டங்கள் உள்ளது. இன்னும் ஒரு தொடர் உள்ளது. என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்" என்றார்.

உலகக் கோப்பைக்குப் பிறகு உங்களது திட்டம் என்ன என்று செய்தியாளர்கள் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 

"உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடலாம். அதன்பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிச்சயம் விளையாடுவேன். டி20 ஆட்டங்களில் நிச்சயமாக விளையாடமாட்டேன். உலகக் கோப்பைக்குப் பிறகு இதுதான் எனது திட்டம்" என்றார். 

இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மேலாளர் ஃபிலிப் ஸ்பூனர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "ஆம், கிறிஸ் கெயில் இந்தியாவுக்கு எதிரான தொடரில், கடைசியாக விளையாடவுள்ளார்" என்றார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு டி20 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 3-வது டி20 ஆட்டம் கயானாவில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்குகிறது. இதன்பிறகு, டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 

கிறிஸ் கெயில் 103 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 7215 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 42.19. 294 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 10,345 ரன்கள் எடுத்துள்ளார். டி20யில் 58 ஆட்டங்களில் விளையாடி 1627 ரன்கள் எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் ஆட்டங்களில் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். மேலும், டி20 ஆட்டத்தில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை இவரிடம் தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com