நியூஸி., டாப் ஆர்டரை மிரட்டிய பாக்., வேகங்கள்: சரிவில் இருந்து மீட்ட நீஷம், கிராண்ட்ஹோம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது. 
நியூஸி., டாப் ஆர்டரை மிரட்டிய பாக்., வேகங்கள்: சரிவில் இருந்து மீட்ட நீஷம், கிராண்ட்ஹோம்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 

நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் கோலின் முன்ரோ களமிறங்கினர். பாகிஸ்தானின் பிரதான வேகப்பந்துவீச்சாளரான முகமது ஆமீர் இந்த ஆட்டத்திலும் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி நல்ல தொடக்கம் தந்தார். கப்தில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அப்ரிதி மிரட்டல்:

இதையடுத்து, அப்ரிதி தனது மிரட்டலை தொடங்கினார். இதனால், முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3) , டாம் லாதம் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற மிக இக்கட்டான நிலையில் இருந்து அணியை மீட்க கேன் வில்லியம்ஸன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போராடினர். அடித்தளம் அமைத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்ஸன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷதாப் சுழலில் ஆட்டமிழந்தார். 

83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என நியூஸிலாந்து அணியின் நிலைமை மேலும் மோசமானது. இந்த நிலையில் நீஷம் உடன் கோலின் டி கிராண்ட்ஹோம் இணைந்தார். 

பொறுப்பான பாட்னர்ஷிப்:

இருவரும் நிலைமை உணர்ந்து பொறுப்புடன் விளையாடினர். விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடிய போதிலும், சரியான பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டி நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம், ரன் குவிக்கும் வேகத்தையும் படிப்படியாக அதிகரித்தனர். 

இதனிடையே, நீஷம் 77-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அவரைத்தொடர்ந்து, கிராண்ட்ஹோம் 63-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் இந்த இணையை பிரிக்க முடியவில்லை. இதனால், இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது, இதேசமயம், நியூஸிலாந்து அணியும் 200 ரன்களைக் கடந்தது. 

கடைசி 5 ஓவர்களில், இந்த இணை ரன் குவிப்பை துரிதப்படுத்தி விளையாடியது. இந்த நிலையில், 48-வது ஓவரில் கிராண்ட்ஹோம் 2-வது ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். அவர் 71 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, நீஷம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி வந்தார். இன்னிங்ஸின் கடைசி பந்தை அவர் சிக்ஸருக்கு பறக்கவிட, நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. நீஷம் 112 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். 

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிதி 3 விக்கெட்டுகளையும், ஆமீர் மற்றும் ஷதாப் கான் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com