கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

தினமணி இணையதளத்தின் சிறந்த உலகக் கோப்பை லெவன்

சுவாமிநாதன்

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறந்த உலக லெவன் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ளது. 

கடந்த ஒன்றரை மாதங்களாக உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி ஆட்டத்துடன் நேற்று நிறைவடைந்தது. இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத இங்கிலாந்து முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தாலும், தொடரில் பங்கேற்ற மற்ற 9 அணிகளிலும் உள்ள வீரர்கள் வெற்றி பெற தங்களது முழு அர்ப்பணிப்பை அளித்துள்ளனர். உதாரணத்துக்கு ஷாகிப் அல் ஹசன், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் போன்ற வீரர்களது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறாமல் போனாலும், இந்த வீரர்கள் தங்களது முழு அர்ப்பணிப்பை அணிக்காக அளித்துள்ளனர். இதன்மூலம், பல புதிய சாதனைகளையும் இவர்கள் புரிந்துள்ளனர்.  

எனவே, இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து, அவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த லெவன் அணியை தினமணி இணையதளம் உருவாக்கியுள்ளது.

தேர்வுக்கான காரணம் அடங்கி வீரர்கள் விவரம்:

ரோஹித் சர்மா:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த உலகக் கோப்பை மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஒரு உலகக் கோப்பையில் மொத்தம் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா புரிந்தார். இவர் 5 சதங்கள் அடித்தாலும், ஒவ்வொரு சதமும் வெவ்வேறான முறையில் வந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதங்கள், கடினமான சூழலில் திணறலுடன் விளையாடி அடித்த சதங்களாகும். மாறாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்கம் முதலே துரிதமாக விளையாடி சதம் அடித்தார். இப்படி எந்த சூழலாக இருந்தாலும், ஆடுகளத்துக்கும் ஆட்டத்தின் தன்மைக்கும் ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டு சதம் அடித்துள்ளார் என்பது முக்கியமானது. 

நியூஸிலாந்துடனான அரையிறுதி ஆட்டத்தில் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், ஹென்ரியின் அற்புதமான பந்துவீச்சால் தான் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களைப் போல் தவறான ஷாட்களை தேர்வு செய்து தவறு செய்யவில்லை. 

இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் 648 ரன்களுடன் அவர் முதலிடத்திலேயே உள்ளார். எனவே, இவர் எந்தவித சந்தேகமும்மின்றி தொடக்க ஆட்டக்காரராக தேர்வு இடம்பெறுகிறார். 

டேவிட் வார்னர்:

ஓராண்டு தடைக்குப் பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் கேப்டன் பிஞ்சுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தையே அளித்திருக்கிறார். உலகக் கோப்பை தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக வார்னர் அரைசதம் அடித்தாலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அற்புதமாக சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

அதன்பிறகு, வங்கதேசத்துக்கு எதிராக 166 ரன்கள் குவித்து இமாலய ரன்களுக்கு அடித்தளம் அமைத்தார். இந்த ஆட்டத்தில் இவருடைய சதத்தால் ஆஸ்திரேலிய அணி 381 ரன்கள் குவித்து மிரட்டியது. இந்த உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்திருந்தாலும் வார்னர் சதம் அடித்து கடைசி வரை நம்பிக்கையளித்து வந்தார். 

இந்த உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் ரோஹித்துக்குப் பின் 3 சதங்களுடன் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் ரோஹித்துக்குப் பின் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் 647 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஜேசன் ராயும் சிறப்பாக விளையாடினாலும், இடக்கை பேட்ஸ்மேன் என்பதாலும், அதிக சதம் மற்றும் அரைசதம் உள்ளிட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலும் இவர் ஜேஸன் ராயை முந்தியுள்ளார்.  

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்):

வில்லியம்ஸன் நியூஸிலாந்து அணியின் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் என்றாலும், இந்த உலகக் கோப்பையில் அவர் பெரும்பாலான ஆட்டங்களில் தொடக்க ஆட்டக்காரர் போலவே விளையாடியுள்ளார். நியூஸிலாந்து அணியில் வில்லியம்ஸனை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் இல்லை. பேட்டிங்கில் தனி ஒரு நபராகவே அவர் நியூஸிலாந்து அணியை இறுதி ஆட்டம் வரை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில், முன்ரோ மற்றும் நிகோல்ஸ் ஆகியோர் படுமோசமான தொடக்கத்தையே அளித்துள்ளனர். எனவே, இவர் முதல் 10 ஓவருக்குள்ளேயே களமிறங்கியுள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, கேன் வில்லியம்ஸன் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்து கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து அந்த அணியை வெற்றி பெறச் செய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க, மீண்டும் நெருக்கடியான சூழலில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் அவர் 148 ரன்கள் குவித்தார். இந்தியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில், ரன் ரேட் குறைவாக இருந்தபோதும் ஆடுகளத்தின் சூழ்நிலை உணர்ந்து பெரிதாக எண்ணாமல் முன்னதாகவே ஆடுகளத்துக்கு உகந்த ஒரு வெற்றி இலக்கை நிர்ணயித்து சாமர்த்தியமாக அந்த இலக்கை அடையச் செய்தார். அதன்பிறகு, அதை டிபெஃன்டும் செய்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதில், பேட்டிங் திறன் மட்டுமின்றி, கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார்.  

அவருடைய ஸ்டிரைக் ரேட் அந்த ஆட்டத்தில் சற்று குறைவாக இருந்தாலும் அவர் களத்தில் நேரத்தை செலவழித்து அடித்த அந்த அரைசதம் முக்கியமானது. இப்படி கச்சிதமாக கணக்கிட்டு வியூகம் வகுத்து பேட்டிங் செய்துள்ளார். அதற்கு பலனாக அந்த அணிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. 

இறுதி ஆட்டத்திலும் இதே வியூகத்தை வகுத்து ஆடுகளத்தை கணித்து விளையாடிய அவர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற 12 வருட சாதனையை அவர் முறியடித்தார். இங்கிலாந்து பலம் வாய்ந்த அணி என்பதால், உலகக் கோப்பையை அந்த அணியே வெல்லும் என்று பெரும்பாலானோர் கணித்தபோதும், இறுதிவரை விட்டுக்கொடுக்காமல், போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார். சொல்லப்போனால், நியூஸிலாந்து அணி தோல்வியடையாமலே கோப்பையை இழந்துள்ளது. இவர், எந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும், அதை எளிதாக கையாண்டு தோனிக்குப் பிறகு அடுத்த கேப்டன் கூலாக இருக்கிறார். 

இவருக்கு தனது அணியின் பலம் என்னவென்பது தெரியும். வீரர்கள் நல்ல நிலையில் இல்லாவிட்டாலும், எந்த வீரரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் இவர் கில்லாடி. இறுதி ஆட்டத்தில் அந்த அணியின் 7-வது பந்துவீச்சாளரான கிராண்ட்ஹோம் 3-வது பந்துவீச்சாளராக பந்துவீச அழைக்கப்பட்டார். அவருடைய ஸ்பெல் மிக முக்கியமான ஸ்பெல்லாகும். இங்கிலாந்து பக்கம் நெருக்கடி திரும்பியதற்கு மிக முக்கியமான பங்களிப்பு கிராண்ட்ஹோம் அளித்ததாகும். இந்த நெருக்கடிக்கு பலனாக நியூஸிலாந்துக்கு ரூட் விக்கெட் கிடைத்தது. இந்தியாவுடனான அரையிறுதியிலும் இந்தியா முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தபிறகு, அவர் தேர்ட் மேன் மற்றும் மிட் ஆஃப் பீல்டர்கள் இல்லாமல் ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கான பீல்டிங்கை நிறுத்தி இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தார். 

நெருக்கடி வெற்றிக்கு வித்திடும் என்றால், எதிரணிக்கு அந்த நெருக்கடியை எப்படி கொடுக்க வேண்டும் என்பதில் வில்லியம்ஸன் வல்லவர் என்றே சொல்லலாம்.  

எனவே சிறந்த கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த கிரிக்கெட் வீரராகவும் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய இவரை தேர்வு செய்யலாம். 

ஜோ ரூட்:

இங்கிலாந்து அணியில் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஜோ ரூட், அந்த அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். நடு ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை நிலையாக வைக்க இவர் மிக முக்கியமான வீரர். சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளும் திறனும், ஸ்டிரைக்கை மாற்றும் திறனும் இவருக்கு உள்ளது. இவரை லைசன்ட் ஹீரோ என்றும் கூட அழைக்கலாம். ஆட்டத்தின் முடிவில் இவர் ஆற்றிய பங்களிப்பு எளிதாக ரசிகர்கள் பார்வைக்கு வராது. ஆனால், இவர் அணிக்கா முக்கியமான பங்களிப்பை அளித்திருப்பார். 

காரணம், ஆக்ரோஷமான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மத்தியில் களமிறங்கி, அந்த அணியை ஆட்டத்தில் இருந்து விலக விடாமல் ஒரு நிலையிலேயே தன் கட்டுக்குள் வைத்திருப்பார். இதுதான் இவருடைய பலம். இந்த உலகக் கோப்பையில், இவர் இரண்டு சதம் மற்றும் 3 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 556 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார். பேட்டிங் சராசரி: 61.77.

ஷாகிப் அல் ஹசன்:

இந்த உலகக் கோப்பை ரோஹித் சர்மாவுக்கு எப்படி மிக முக்கியமான உலகக் கோப்பையோ, அதேபோல் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசனுக்கும் இது மிக முக்கியமான உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பையில், பேட்டிங் வரிசையில் இவர் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றப்பட்டு களமிறக்கப்பட்டார். இது வங்கதேச அணிக்கு அட்டகாசமான வகையில் உதவியது. அவர் இந்த உலகக் கோப்பையில் 8 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தபட்சம்  அரைசதத்தை அடித்துள்ளார். 7 இன்னிங்ஸில் 2 சதம், 5 அரைசதம் அடித்து பேட்டிங்கில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அரைசதம் அடிக்காத அந்த ஒரு இன்னிங்ஸிலும்கூட அவர் எடுத்த ரன்கள் 41 ஆகும். 

387 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றாலும், நம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு சதம் அடித்து விளையாடினார். இந்த இன்னிங்ஸில் இவர் 121 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 44 ஆகும். இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மீண்டும் அபார சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றி இலக்கை அடையச் செய்தார். இந்த உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்தது இந்த இன்னிங்ஸில் மட்டும் தான். 

பேட்டிங் இப்படி என்றால் பந்துவீச்சிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இவர் இந்த உலகக் கோப்பையில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் சுழற்பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளராக சாஹல் 12 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 11 விக்கெட்டுகளுடன் ஷாகிப் இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை அவர் தனிநபராக தோளில் சுமந்துள்ளார். 

ஒரு உலகக் கோப்பையில் பேட்டிங்கில் 500 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற அரிய சாதனையை ஷாகிப் அல் ஹசன் புரிந்துள்ளார். 

பென் ஸ்டோக்ஸ்:

இங்கிலாந்து அணியில் நடுவரிசை பேட்ஸ்மேனாக இக்கட்டான நிலையில் களமிறங்கி நெருக்கடி சூழலை துல்லியமாக எதிர்கொண்டு ஒரு போராட்ட குணத்தை இந்த உலகக் கோப்பையில் வெளிப்படுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஆட்டத்திலேயே 89 ரன்கள் குவித்து அந்த அணியை 300 ரன்களைக் கடக்க உதவினார். 

முதல் போராட்டம்:

இதன்பிறகு, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப, பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்து வந்தார். அந்த அணி வெற்றிக்கு மிக அருகில் சென்றும் டெய்லண்டர்களால் கடைசி கட்டத்தில் அவருக்கு ஒத்துழைக்க முடியாமல் போனது. இதனால், இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். ஒரு விக்கெட் இருந்திருந்தாலும்கூட இவர் அணியை வெற்றி பெறச் செய்வதற்கான வாயப்பு பிரகாசமாக இருந்தது.   

இரண்டாவது போராட்டம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 286 ரன்கள் என்ற இலக்கை விரட்டி களமிறங்கிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்து வந்தார். 89 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ் மிட்செல் ஸ்டார்க்கின் அற்புதமான யார்க்கர் பந்தில் போல்டானார். எப்படிப்பட்ட ஜாம்பவான் பேட்ஸ்மேனாலும் இந்த பந்தை எதிர்கொள்ள முடியுமா என்று தெரியாது என்கிற அளவுக்கு அற்புதமான யார்க்கரால் போல்டானதால் இங்கிலாந்து தோல்வியடைந்தது. இந்த இன்னிங்ஸில் இவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 27 என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் நடு ஓவர்களில் ஆட்டத்தை இழக்கத் தொடங்கிய அந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் அதிரடியான பினிஷிங்கை அளித்தார். அவர் 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தது இன்னிங்ஸில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது போராட்டம், அதேசமயம் முக்கியமான போராட்டம்:

இறுதி ஆட்டம் என்பதே மிகப் பெரிய நெருக்கடி. கடினமான ஆடுகளத்தில் 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த நிலையில் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்தார். கடைசி வரை களத்தில் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற வியூகத்துடன் விளையாடி வந்தார். அதற்கேற்றார்போல் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருநதார். இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது வெற்றி இலக்கை அடையமுடியாவிட்டாலும், 14 ரன்கள் எடுக்க வைத்து சமன் செய்தார். அதன்பிறகு, சூப்பர் ஓவரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து 15 ரன்கள் எடுக்க உதவினார். அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தாலும், அணியை வெற்றி பெறச் செய்து இறுதி ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்படி அணிக்கு தேவையான நேரத்திலும், இக்கட்டான நேரத்திலும் கைகொடுத்த போராட்ட நாயகம் ஸ்டோக்ஸ். 

இவர் பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் உதவுவார் என்பதால், தேவையான நிலையில் 6-வது பந்துவீச்சாளராக அணியில் பயன்படுவார். இந்த உலகக் கோப்பையில் அவர் 468 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி: 66.85. பந்துவீச்சில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்):

இந்த உலகக் கோப்பையில் சிறந்த விக்கெட் கீப்பராக தோனி, பட்லர், ஷை ஹோப், டி காக் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அணியின் பினிஷிங் என்றாலும் சரி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலை என்றாலும் சரி முழு பங்களிப்பேன் என்று கில்லியாக விளையாடியுள்ளார். 

முதல் ஆட்டத்திலேயே முக்கியமான கட்டத்தில் களமிறங்கி 45 ரன்கள் சேர்த்தார். அதன்பிறகு, இந்தியாவுடன் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தாலும், இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான தொடக்கம் அமைந்தபோதிலும், அந்த அணி ஃபினிஷங்கில் திணறியது. ஆனால், கேரி 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அந்த அணியை 280 ரன்களை எட்டச் செய்தது. 

இதன்பிறகு, நியூஸிலாந்துக்கு எதிராக 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய அந்த அணியை கவாஜாவுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அந்த சூழ்நிலையில், 100 ஸ்டிரைக் ரேட்டில் அவர் 71 ரன்கள் குவித்தது, ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றியது. இதனால், ஆஸ்திரேலியாவும் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 326 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி, 120 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் களமிறங்கிய கேரி, வார்னருடன் இணைந்து இலக்கை நோக்கி விளையாடினார். வார்னர் சதம் அடித்து ஒத்துழைக்க இவர் அரைசதம் அடித்தார். வார்னர் 122 ரன்களுக்கு முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். எனினும், 46 ஓவர் வரை போராடிய கேரி 69 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். 

இதன்பிறகு, அரையிறுதியில் மீண்டும் ஒரு நெருக்கடியான நேரத்தில் களமிறங்கினார் கேரி. டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கு ரன்களுடன் ஆட்டமிழக்க 7-வது ஓவரிலேயே களமிறங்கினார். ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து நம்பிக்கையளித்தார். ஆர்ச்சரின் ஆக்ரோஷமான பவுன்சர் இவரது ஹெல்மட்டை தாக்க இவருக்கு ரத்தம் வழிந்தது. எனினும், அவர் களத்தைவிட்டு வெளியேறாமல் விளையாடினார். அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும், இவர் இந்த இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்தார். 

இந்த உலகக் கோப்பையில் இவர்  20 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 62.50 ஆகும். மொத்தம் 375 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு நெருக்கமாக வேறு விக்கெட் கீப்பர்கள் போட்டியில் இல்லை. 

மிட்செல் ஸ்டார்க்:

ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மெக்ராத் சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார். 2007 உலகக் கோப்பையில் மெக்ராத் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த முறை ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி, அந்த சாதனையை முறியடித்துள்ளார். இவர் ஒவ்வொரு 20.51 பந்துக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார். இடக்கை வேகப்பந்துவீச்சாளரான இவர் இன்ஸ்விங் மூலம், தொடக்க ஆட்டக்காரர்களை திணறடித்தார். நடுஓவர்களில் பவுன்சர்களில் திணறடித்தார். 

இங்கிலாந்துடனான ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு கச்சிதமான யார்க்கர் பந்து அது. இப்படி, தொடக்க ஓவராக இருந்தாலும் சரி, நடு ஓவர்களில் பாட்னர்ஷிப்புகளை பிரிக்க வேண்டும் என்றாலும் சரி, டெத் பௌலிங்கில் மிரட்ட வேண்டும் என்றாலும் சரி, பிஞ்ச் அழைக்கும் போதெல்லாம் இவர் தனது பணியை கச்சிதமாக செய்து வந்தார். 

இவர் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 5 விக்கெட்டுகளும், 2 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 

ஜோஃப்ரா ஆர்ச்சர்:

இவர் மேற்கிந்தியத் தீவுகளில் பிறந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆக்ரோஷமான பவுன்சர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அரையிறுதியில் அலெக்ஸ் கேரிக்கு வீசியதும், இறுதி ஆட்டத்தில் கிராண்ட்ஹோமுக்கு வீசியதும் ஆக்ரோஷமான பவுன்சர்களுக்கு எடுத்துக்காட்டு. ஓரளவுக்கு நல்ல மனநிலையில் இருந்த கிராண்ட்ஹோம், இந்த பவுன்சருக்கு பிறகு தன்னம்பிக்கை இழந்து திணறினார். 

இவர் இந்த உலகக் கோப்பையில் ஆர்ச்சர் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியலில் 371 டாட் பந்துகளை வீசி முதலிடத்தில் உள்ளார். இப்படி அதிகப்படியான டாட் பந்துகள் மற்றும் பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு பலனாக மறுதிசையில் வீசும் பந்துவீச்சாளருக்கு சில சமயங்கள் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. எனவே, இவர் தானும் விக்கெட் வீழ்த்தி, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அந்த நெருக்கடி சூழலை ஏற்படுத்துகிறார். குறிப்பாக டெத் பௌலங்கில் ரன்களை கச்சிதமாக கட்டுப்படுத்துகிறார். இவருடைய எக்கானமி 4.77 ஆகும். முதல் பவர்பிளேவில் மட்டும் அதாவது, முதல் 10 ஓவரில் மட்டும் இவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

லாக்கி பெர்குசன்:

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க்குக்கு அடுத்தபடியாக 21 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் பெர்குசன். இவர், நியூஸிலாந்து அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இந்த உலகக் கோப்பையில் செயல்பட்டுள்ளார். தொடக்கத்தில் ஹென்ரி மற்றும் போல்ட் சிறப்பாக பந்துவீசி ஒரு களம் அமைக்க, அதன்பிறகு நடு ஓவர்களில் இவர் பவுன்சர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார். 

வேகம் கொண்ட பவுன்சர் பந்தை வீசி அதற்கான தகுந்த பீல்டிங்கையும் நிறுத்தி விக்கெட் வீழ்த்தி நியூஸிலாந்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவதற்கு வகுத்த திட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவர் இந்த உலகக் கோப்பையில் 4 முறை  3 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். ஒரு முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஒரு பாட்னர்ஷிப் அமைத்து அடித்தளம் அமைக்கும் நடுவரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது இந்த உலகக் கோப்பையில் இவருடைய ஸ்பெஷலாக இருந்துள்ளது. இறுதி ஆட்டத்திலும் கூட முக்கியமான பாட்னர்ஷிப்பான ஸ்டோக்ஸ், பட்லர் இணையை பிரித்து ஆட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இவர் தான். எனவே, இவர் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார். 

ஜாஸ்பிரித் பூம்ரா:

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் நம்பர் -1 பந்துவீச்சாளர் என்பதற்கு ஏற்றவாறு விராட் கோலிக்கு மிகப் பெரிய அளவில் உதவியுள்ளார் பூம்ரா. இந்திய அணி தரப்பில் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார். இவர் முதல் 10 ஓவர் என்றாலும், கடைசி 10 ஓவர் என்றாலும் தனது பணியை கச்சிதமாக செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், அந்த அணி கடைசி 10 ஓவரில் 92 ரன்கள் குவித்தது. இதில் 5 ஓவர்களை வீசிய பூம்ரா வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது இவரது முக்கிய அம்சமாகும். 

வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்த அந்த அணி இந்திய அணிக்கு ஒரு கட்டத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பந்துவீச வந்த பூம்ரா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை ஒரே ஓவரில் முடித்தார். இப்படி அணிக்கு தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை இவர் ஆற்றியுள்ளார். 

இந்த உலகக் கோப்பையில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியதில் 9 ஓவர்கள் வீசி இவரே முதலிடத்தை வகிக்கிறார். ஒரு பக்கம் விக்கெட்டையும் வீழ்த்துகிறார், பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்கவிடாமலும் தடுக்கிறார். எனவே, இவரது பங்களிப்பு என்பது ஆட்டத்தின் எந்த கட்டமாக இருந்தாலும், அது முக்கியமானதே.  

இவர்கள் அல்லாது பல்வேறு வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பை சிறப்பாக அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து முகமது ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்தில் நீஷம் ஆல்-ரௌண்டராக ஜொலித்துள்ளார். இங்கிலாந்தில் பேர்ஸ்டோவ் ஆகட்டும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மார்கன் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்ததாகட்டும் என பல்வேறு வீரர்கள் அணிக்கு தேவையான நேரத்தில் தேவையான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT