சூப்பர் ஓவரும் டை ஆனதால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.
உலகக் கோப்பை இறுதி ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சூப்பர் ஓவர் பேட்டிங்: http://bit.ly/30xirQ9
16 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் நியூஸிலாந்து அணி சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. நியூஸிலாந்து தரப்பில் நீஷம் மற்றும் கப்தில் களமிறங்கினர். முதல் பந்தை ஆர்ச்சர் வைடாக வீசினார். இதனால், முதல் பந்து மீண்டும் வீசப்பட்டது. அந்த பந்தில் நீஷம் இரண்டு ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தை நீஷம் இமாலய சிக்ஸர் அடிக்க இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது.
3-வது பந்தில் நீஷம் மீண்டும் இரண்டு ரன்கள் எடுக்க, முதல் 3 பந்தில் நியூஸிலாந்துக்கு 11 ரன்கள் கிடைத்தது. 4-வது பந்திலும் கப்தில் சிறப்பாக ஒத்துழைக்க நீஷம் மீண்டும் இரண்டு ரன்கள் ஓடினார். இதனால், இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ஆர்ச்சர் ஷாட் பிட்ச்சாக வீச நீஷமால் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது.
மிட் விக்கெட் திசையில் பந்தை தட்டிவிட்டு கப்தில் ஓடினார். இரண்டாவது ரன்னுக்காக கப்தில் கீப்பர் திசைக்கு ஓடினார். ஆனால், ராய் வீசிய பந்தை பிடித்து பட்லர் அதற்குள் ஸ்டம்புகளைத் தகர்த்தார். இதனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதனால், அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை தொடரை வென்றது.
இறுதி ஆட்டத்திலும் போராடி, சூப்பர் ஓவரிலும் போராடியபோதும் வெறும் பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் துரதிருஷ்டவசமாக உலகக் கோப்பையை இழந்தது நியூஸிலாந்து.