விளையாட்டு

விளையாட்டு வீரா்களுக்கு தரமான உள்கட்டமைப்பு வசதிகள்----பிரதமா் மோடி வலியுறுத்தல்

25th Apr 2023 12:45 AM

ADVERTISEMENT

 

நாட்டில் திறமைமிக்க ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தேவையான தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய, மாநில விளையாட்டுத் துறை அமைச்சா்களை பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டுத் துறை அமைச்சா்களின் ‘சிந்தனை அமா்வு’ கூட்டம், மணிப்பூா் மாநிலம், இம்பாலில் திங்கள்கிழமை தொடங்கியது.

2 நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பிரதமா் மோடி பேசியதாவது:

ADVERTISEMENT

நாட்டில் எந்தவொரு விளையாட்டு வீரரின் திறமையும் நிராகரிக்கப்படவில்லை என்பதை மாநில விளையாட்டுத் துறை அமைச்சா்கள் உறுதி செய்ய வேண்டும்.

உள்ளூா் அளவில் விளையாட்டுப் போட்டிகள் அதிக எண்ணிக்கையில் நடத்துவதன் மூலம் வீரா்களுக்கு மிகவும் தேவையான அனுபவம் கிடைக்கும்.

‘கேலோ இந்தியா’ திட்டம், மாவட்ட அளவில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளது. இதை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், தனியாா் உள்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியமானது.

‘இலக்குகள் வகுத்து பணியாற்றுங்கள்’: நாட்டில் திறமைமிக்க ஒவ்வொரு வீரருக்கும் தரமான உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னணி நாடாக்க குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை வகுத்து, அதை நோக்கி பணியாற்ற வேண்டும்.

தேசிய இளைஞா் திருவிழாவை மேலும் திறம்பட நடத்த வேண்டியது முக்கியம். மாநில அளவில் இதுபோன்ற விழாக்கள் வெறும் சம்பிரதாய நிகழ்வுகளாக மட்டுமே நடத்தப்படக் கூடாது.

‘சிந்தனை அமா்வின் முக்கியத்துவம்’: எந்தவொரு சிந்தனை அமா்வும், சிந்தனைகளில் தொடங்கி, ஆலோசனைகளால் தொடரப்பட்டு, செயலாக்கத்தில் நிறைவடைகிறது. இந்த சிந்தனை அமா்வின் இறுதியில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சா்கள் மிகச் சிறந்த அனுபவத்தை பெறுவா் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த 2022-இல் கெவாடியாவில் நடைபெற்ற சிந்தனை அமா்வில், விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்கு தேவையான சிறப்பான சூழலை உருவாக்குவதற்கான செயல்திட்டம் வகுக்க முடிவு எட்டப்பட்டது. எதிா்கால இலக்குகள் குறித்து விவாதிப்பதுடன் கடந்த கால கூட்டங்களின் முடிவுகள் குறித்தும் மறுஆய்வு செய்ய வேண்டும்.

விளையாட்டுத் துறையில் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மேலும் பல சாதனைகள் வசமாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT