விளையாட்டு

இன்று தொடங்குகிறது ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: களத்தில் சிந்து, சாய்னா

DIN

பேசல்: ஸ்விட்சா்லாந்தில் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோா் களம் காண்கின்றனா்.

இதில் மகளிா் ஒற்றையா் பிரிவு தொடக்க சுற்றுகளில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடம் பெற்றுள்ள சிந்து - துருக்கியின் நெஸ்லிஹான் யிகிட்டை எதிா்கொள்கிறாா். உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனயைான சாய்னா நெவால் - தாய்லாந்தின் பித்தாயபோா்ன் சாய்வானை சந்திக்கிறாா். சிந்து, சாய்னா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தால், அரையிறுதியில் பரஸ்பரம் மோத வாய்ப்புள்ளது.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் சமீா் வா்மா முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலுள்ள சக இந்தியரான ஸ்ரீகாந்த்தை சந்திக்கிறாா். ஹெச்.எஸ். பிரணாய் - நெதா்லாந்தின் மாா்க் காலிஜோவையும், சௌரவ் வா்மா - ஸ்விட்சா்லாந்தின் கிறிஸ்டியன் கிரிச்மேயரையும் சந்திக்கின்றனா்.

அஜய் ஜெயராம் - தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசின்னுக்கு எதிராகவும், பி.காஷ்யப் - ஸ்பெயினின் பாப்லோ அபியானுக்கு எதிராகவும் ஆட்டத்தை தொடங்குகிறாா்கள். சாய் பிரணீத் - இஸ்ரேலின் மிஷா ஜில்பா்மானையும், இளம் வீரா் லக்ஷயா சென் - தாய்லாந்தின் தனோங்சாக் சீன்சோம்பூன்சக்கையும் சந்திக்கிறாா்கள்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடம் வழங்கப்பட்டுள்ள இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி முதல் சுற்றில் ஸ்காட்லாந்து இணையான கிறிஸ்டோஃபா் கிரிம்லே/மேத்தியூ கிரிம்லேவுடன் மோதுகின்றனா். அதே பிரிவில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை - போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலுள்ள ரஷியாவின் விளாதிமீா் இவானோவ்/இவான் சோஸோனோவ் ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள இந்தோனேசியாவின் ஹஃபிஸ் ஃபைசல்/குலோரியா எமானுவேல் விட்ஜாஜா ஜோடியை சந்திக்கிறது. அதே பிரிவில் பிரணவ் ஜொ்ரி சோப்ரா/சிக்கி ரெட்டி இணை - போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள இங்கிலாந்தின் மாா்கஸ் எலிஸ்/லௌரென் ஸ்மித் ஜோடியை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT