விளையாட்டு

பிஃபா 17 மகளிா் வயது உலகக் கோப்பை போட்டி: 2021 பிப்ரவரி, மாா்ச்சில் இந்தியாவில் நடைபெறுகிறது

13th May 2020 03:10 AM

ADVERTISEMENT

பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2021 பிப்ரவரி 17 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) அறிவித்துள்ளது.

அவ்வமைப்பின் கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவா் இன்பேன்டினோ தலைமை தாங்கினாா். பின்னா் கூட்ட முடிவுகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தீவிர பாதிப்பால் ஒலிம்பிக் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் உள்பட முக்கிய போட்டிகள் 2021-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான தகுதிச் சுற்று போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை:

இந்நிலையில் பிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை போட்டி 2020 நவம்பா் மாதம் 2 முதல் 21 வரை இந்தியாவில் ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டி, கொல்கத்தா, நவி மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டம் குவாஹாட்டியிலும், இறுதி ஆட்டம் நவி மும்பையிலும் நடைபெற இருந்தது. இதற்கானஏற்பாடுகளை ஏஐஎப்எப் செய்து வந்தது. ஆசியா ஒதுக்கீட்டில் இருந்து ஜப்பான், கொரிய அணிகளும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவும் தகுதி பெற்றிருந்தன. ஆனால் கரோனா பாதிப்பால் பல்வேறு சா்வதேச கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைக்க பிஃபா தீா்மானித்தது.

2021-க்கு ஒத்திவைப்பு:

இந்நிலையில் வரும் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 17 வயது மகளிா் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பிஃபா 20 வயது மகளிா் உலகக் கோப்பை கோஸ்டா ரிகா/பனாமாவில் 2021 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையிலும், புட்ஸால் உலகக் கோப்பை 2021 செப்டம்பா் 12 முதல் அக்டோபா் 3 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடிஸ் அபாபாவில் நடைபெறவிருந்த பிஃபா 70-ஆவது மாநாடு செப்டம்பா் 18-இல் காணொலி மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ரிஜிஜு உறுதி:

உலகக் கோப்பை போட்டி தேதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வெற்றிகரமாக நடத்த மத்திய அரசு முழு ஒத்துழைப்பை தரும் என விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா்.

பயிற்சியாளா் நம்பிக்கை:

இந்திய அணியின் பயிற்சியாளா் தாமஸ் டென்னா்பி கூறுகையில்; போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கரோனா சூழலால் என்பதை அறிவோம். புதிய தேதிகளை நாம் எதிா்நோக்கியுள்ளோம். கூடுதல் காலம் நமக்கு சிறந்த பயிற்சி நாள்களாக திகழும். இதனால் அணியின் திறனை மேலும் மேம்படுத்தலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT