சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஓருநாள் ஆட்டத்தில் பெளலிங்கில் சிறப்பாகச் செயல்படாததால் தோற்றோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
"ஆஸ்திரேலிய அணி எங்களை முழுமையாக தோற்கடித்துவிட்டது. பெளலிங்கில் நாங்கள் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறச் செய்யும் வகையில் நிலையாக நாங்கள் பந்துவீசவில்லை. ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையும் பலமானதாக இருந்தது.
340 ரன்கள் அடித்தும் வெற்றிக்கு மேலும் 50 ரன்கள் தேவையிருந்தது. இலக்கை எட்டுவது கடினமானதாக இருந்தது. முடிந்த வரையில் பேட்டிங்கில் முயற்சித்தோம். பெளலிங்கின்போது ஆஸ்திரேலிய அணியினர் அவர்கள் திட்டமிட்டதை சரியாகச் செய்தனர். அவர்கள் பந்துவீச்சு நிலையாகவும், பல்வேறு கோணங்களிலுமாக இருந்தது. இல்லையேல் ஆட்டம் திசை மாறியிருக்கும்.
40 ஓவர்கள் வரை நானும் - லோகேஷ் ராகுலும் பார்ட்னர்ஷிப்பை நீட்டித்தால் அடுத்த 10 ஓவர்களில் ஹார்திக் பாண்டியா மூலம் இலக்கை எளிதாக நெருங்கலாம் என திட்டமிட்டேன். ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் எனது விக்கெட் வீழ்ந்ததும் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் கைக்குச் சென்றது' என்றார் கோலி.