மோர்முகாவ்: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவாவின் மர்காவ் நகரில் உள்ள ஃபடோர்டா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவா அணிக்காக இகோர் அங்குலோவும், நார்த்ஈஸ்ட் அணிக்காக இத்ரிசா சைலாவும் தலா ஒரு கோல் அடித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் கோலுக்காக தீவிரமாக முயற்சித்தபோதும், ஏறத்தாழ முதல் பாதியின் இறுதி வரை அதற்கான வாய்ப்பு கோவா - நார்த்ஈஸ்ட் அணிகளுக்கு கிடைக்கவில்லை. அந்நிலையில் ஆட்டத்தின் 40-ஆவது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் கோல் கணக்கை தொடங்கியது.
நார்த்ஈஸ்ட்டுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் இத்ரிசா சைலா மிகத் துல்லியமாக கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார். பந்து நேராக மையப்பகுதியில் மேலாக போஸ்ட்டுக்குள் செல்ல, கோவா கோல் கீப்பர் இடது புறமாகத் தாவிய முயற்சி வீணானது.
ஒரு கோல் அடிக்கப்பட்டதும் ஆட்டம் விறுவிறுப்படைய, மீண்டது கோவா அணி. கோவாவும் தனது கோல் கணக்கை 43-ஆவது நிமிடத்தில் தொடங்கியது. சக வீரர் பாஸ் செய்த பந்தை கோவா வீரர் பிரான்டன் ஃபெர்னான்டஸ் மிகச் சாதுர்யமாக கடத்திக் கொண்டு வந்து பாக்ஸூக்குள்ளாக நின்றிருந்த மற்றொரு கோவா வீரரான இகோர் அங்குலோவிடம் ஒப்படைத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட அங்குலோ தாமதமின்றி கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதி ஆட்டம் சமன் ஆனது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியில் இரு அணிகளுமே வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தன. எனினும் பரஸ்பர தடுப்பாட்டத்தால் இரண்டுக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே டிரா ஆனது.
இன்றைய ஆட்டம்: மும்பை சிட்டி எஃப்சி எஸ்சி ஈஸ்ட் பெங்கால்
இடம்: பாம்போலிம்
நேரம்: இரவு 7.30 மணி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்