Specials

மாட்டுப் பொங்கலுக்காகவே தயாராகும் நெட்டி மாலைகள்

DIN


தமிழர்களின் தேசிய விழாவாகப் போற்றப்படும் பொங்கல் விழா 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதில், இரண்டாவது நாள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப் பொங்கல் நடத்தப்படுகிறது.

உழவனுக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருந்து, வேலைப்பளுவை குறைப்பதில் பங்கெடுக்கும் உழவு மாடுகள், கறவை மாடுகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கலிட்டு கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மாடுகளின் கொம்புகளில் பல வர்ணம் பூசி ழகு பார்க்கும் நன்னாள் மாட்டுப் பொங்கல். இந்த மாட்டுப் பொங்கலின்போது மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, அதற்கு மாலை அணிவித்து விவசாயிகள் அழகு பார்ப்பர். இந்த கால்நடைகளுக்கு அணிவிக்கப்படுவதற்கென்றே நெட்டி மாலைகள் விற்கப்படுகின்றன.

விதவிதமாக பிளாஸ்டிக், வாடாத மாலைகள் என வந்தாலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கலின்போது மாடுகளுக்கு நெட்டி மாலைகளைத் தேடிப்பிடித்து வாங்கி அணிவித்து அழகு பார்க்கும் விவசாயிகள் ஏராளம்.

இந்த நெட்டி மாலைகள் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் ஏறத்தாழ 25 குடும்பங்கள் தயாரித்து வருகின்றன. இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தது:
திப்பிராஜபுரத்தில் பல தலைமுறைகளாக நெட்டி மாலை தயாரித்து வருகிறோம். விவசாயக் கூலி வேலை செய்து வரும் நாங்கள் தீபாவளி முடிந்ததும் இப்பணிகளைத் தொடங்கி விடுவோம்.

ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் நெட்டிகள் வளர வாய்ப்பில்லை. அப்போது, நெட்டிகள் கிடைப்பது சிரமமாக இருக்கும். இதேபோல, தண்ணீர் தேங்கியிருக்கும் சில குளங்களில் மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தருவதால், நெட்டிகளை வளர விடாமல் செய்வர். இதன் காரணமாக நெட்டிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

எப்படி இருந்தாலும் நீர் நிலைகளான ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்றில் வளர்ந்து வரும் நெட்டிகளை தேடிப் பிடித்து, வெட்டிக் கொண்டு வந்து வெயிலில் காய வைப்போம்.

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தயாரிக்கப்பட்டு வரும் நெட்டி மாலைகள்

இந்த மாலைகளைக் கோர்க்க தாழம்பு நாரை அறங்தாங்கி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதியில் வாங்கி வந்து காய வைக்கப்படும். நெட்டியைக் கத்தியால் சீவி காய வைத்த பின்னர் பல வண்ணச் சாயப் பொடிகளில் நனைத்து, சிறு சிறு துண்டுகளாக்குவோம். இதையடுத்து நெட்டியைத் தாழம்பு நாரில் கோர்த்து காய வைப்போம்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், குடவாசல்,  வலங்கைமான், நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு போய் விற்று வருவோம். சில வியாபாரிகள் நேராக எங்களிடம் வந்து வாங்கிச் செல்வதுண்டு. இந்த மாலைகள் ஒரு ஜோடி ரூ. 10-லிருந்து ரூ. 50 வரை விற்பனையாகிறது.

இதற்காக குடும்பத்துடன் 3 மாதங்கள் உழைக்கிறோம். இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் யாரிடமும் கடன் வாங்காமல் பொங்கள் பண்டிகையை கொண்டாடுகிறோம்.  

கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நெட்டி மாலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள்.

இந்த நவீன யுகத்தில் பிளாஸ்டிக், காகித பூ, வாடாத மாலைகள் வந்தாலும், விவசாயிகள் இப்போதும் நெட்டி மாலைகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனர். தாழம்பு நாரை மாடுகளின் கழுத்தில் அணியும் போது குளிர்ச்சியாகவும், இறுக்கம் இல்லாமலும் இருக்கும் என்பதால் விவசாயிகள் இதை விரும்பி வாங்குகின்றனர்.

ஆனால் பிளாஸ்டிக், காகித பூ மாலைகளில் மெல்லிய கம்பி மூலம் மாலைகள் கோர்க்கப்படுவதால், சில நேரங்களில் மாட்டின் கழுத்தில் இறுக வாய்ப்புள்ளது. இதனால்தான் விவசாயிகள் நெட்டி மாலைகளை வாங்கி கால்நடைகளுக்கு அணிவிக்கின்றனர்.

பாரம்பரியமான இந்த தொழில் நலிவடையாமல் பாதுகாத்து எங்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கினால், இத்தொழில் நலிவடையாமல் இருக்கும்  என்கின்றனர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT