Specials

இயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாள்

சோ.தெஷ்ணாமூா்த்தி

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர்களின் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பியா நாடுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மொரீஷியஸ் உள்பட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்  பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் விழா உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லக் கூடிய ஒரு நன்றியாகக் கொண்டாடப்படுகிறது. மஞ்சள்  தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி கரும்பு தின்று பொங்கல் விழா கொண்டாடப்படும்.

தைப்பொங்கல் வரலாறு

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து புதுப்பானையிலிட்டு, புதிய அடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று அறுவடை ( அந்தக் காலத்தில் ) நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த்தேக்கத்தால் ஒரே ஒரு அறுவடை தான் நடக்கக் கூடிய நிலையாக மாறியுள்ளது. அதனால், மார்கழி அல்லது தை மாத அறுவடைதான் நாடெங்கும் நடக்கும். அறுவடை முடிந்து புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவழிக் காய்கறிகளான அவரை, புடலை, கத்தரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு உள்ளிட்டவைகளே படைக்கப்படும். 

செந்நெற் பச்சரிசியைப் தவிடு நீக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல் . பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாகக் கூறலாம்.

தமிழர் தேசிய விழா


பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள்  சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிறிஸ்துவர்கள் தங்களது தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகையான காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கமும், பொங்கலன்று வீட்டில் அசைவ உணவுகளைச் சாப்பிடாமல் இருக்கும் வழக்கமும் உள்ளன.

பொங்கல் விழா மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தம்முடைய நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனைத் தெரிந்து தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT