Specials

தம்பிரான் தொழுவும் மண் மனம் மாறா மாட்டுப் பொங்கலும்

கோ.ராஜன்

தேனி மாவட்டம் கம்பத்திலுள்ள ஸ்ரீநந்தகோபாலன் கோயிலில், மாட்டுப் பொங்கல் திருநாளை  மக்கள் பாரம்பரிய விழாவாக கொண்டாடி, தம்பிரான் தொழு மாடுகளுக்குப் பொங்கலிட்டு, செங்கரும்பு படைத்து வழிபடுகின்றனர்.

கம்பத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீநந்தகோபாலன் சுவாமி கோயில் மற்றும் தம்பிரான் மாட்டுத் தொழுவில், ஆண்டு தோறும் தை 2-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் திருநாள் பாராம்பரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. "மண் மணம் மாறாத இப்பொங்கல் திருவிழாவில், கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.

தம்பிரான் தொழு

நந்தகோபாலன் கோயில் வளாகத்தில் உள்ள தம்பிரான் தொழுவின் பராமரிப்பில் தற்போது 400-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகள் உள்ளன.  விவசாயிகள் நேர்த்திக் கடனாகவும், தொப்புள் கொடி சுற்றிப் பிறந்த தலைச்சான் காளை கன்றுகளையும் மாட்டுப் பொங்கலன்று தம்பிரான் தொழுவுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.

ஸ்ரீ நந்தகோபாலன் சுவாமி கோயில்

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்தும் பராமரிக்க முடியாத மாடுகள் தம்பிரான் தொழுவில் சேர்க்கப்படுகின்றன. கோயில் மாடுகள் தம்பிரான் தொழுவத்திலும், சுருளி மலையிலும் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பட்டத்துக் காளை

தம்பிரான் தொழு கன்றுகளிலிருந்து கோயில் பட்டத்துக் காளை தேர்ந்தெடுக்கப்படுகிறது. பட்டத்துக் காளையின் ஆயுள் காலத்திற்குப் பின், புதிய பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படும். கோயில் வளாகத்தில் செங்கரும்பு தட்டைகளை நட்டு வைத்து, தொழு கன்றுகளுக்குள் முதலாவதாகச் சென்று கரும்புத் தட்டையை கடிக்கும் கன்றினை, பொதுமக்கள் முன்னிலையில் பட்டத்துக் காளையாக கோயில் பரம்பரை பட்டத்துக்காரர் தேர்வு செய்வார். கடந்த 2017, ஜூன் மாதம் தம்பிரான் தொழுக்கு புதிதாக பட்டத்துக் காளை தேர்வு செய்யப்பட்டது.

பாரம்பரிய பொங்கல்

ஸ்ரீநந்தகோபாலன் சுவாமி கோயிலில் தை 2-ஆம் நாள் நடைபெறும் மாட்டுப் பொங்கல் விழாவில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சமுதாயம் வாரியாக பொதுமக்கள் புத்தாடை அணிந்து, கையில் கரும்புத் தட்டையை ஏந்தி  ஊர்வலமாகச் சென்றும், குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் சென்றும் புத்தரிசி பொங்கலிட்டு, பட்டத்துக் காளை மற்றும் தொழு மாடுகளுக்கு செங்கரும்பு படைத்து வழிபடுகின்றனர்.

தம்பிரான் தொழுவில் நந்தகோபாலன் சுவாமி, லட்சுமி, விஷ்ணு தெய்வங்களுக்குப் பிறகு, அன்னப்பறவை உருவம் பொறித்த ஸ்தூபி, பட்டத்துக்  காளை மற்றும் தொழு மாடுகளும் பிரதானமாக வழிபடப்படுகிறது.

தம்பிரான் தொழு மாடுகள்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும், தம்பிரான் தொழுவில் பொதுமக்கள் தொழு மாடுகளுக்கு கீரை மற்றும் தீவனப் புல் படைத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர். தம்பிரான் தொழு மாடுகள் மற்றும் பட்டத்துக் காளையை அனைத்து மதத்தினரும் வழிபட்டுச் செல்வது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT