Specials

கிராமமே கொண்டாடும் மார்கழிப் பொங்கல் 

சாலமோன் ராஜ்குமார்

பொங்கல் என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தைப் பொங்கலும் சூரிய வழிபாடும்தான். ஆனால் ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கலை விட மார்கழி மாதம் 3-ஆவது செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் ஒன்று கூடி வீதிகள் தோறும் பொங்கலிட்டு அம்மனுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர். ஏன் மார்கழிப் பொங்கலுக்கு சிறப்பு?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குருவன்கோட்டை கிராமத்தில் தான் இந்த மார்கழிப் பொங்கல் ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்காக கிராம மக்களில் பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள், ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளன்று இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களையும் அலங்கரித்து தெருக்கள் சந்திக்கும் இடங்களில் பந்தலிட்டு பந்தலில் மஞ்சள், கரும்பு தோரணங்கள் கட்டுவர்.

ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் அந்த தெருவில் வசிக்கும் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிட்டு அதே இடத்தில் அம்மனை வழிபடுவர். கிராமத்தில் சுமார் 30 இடங்களில் இந்த பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெறும். பொங்கலிடுதலுக்குப் பின்னர் கிடா வெட்டி படைத்து விருந்தினர்களை அழைத்து விருந்து படைக்கும் நிகழ்ச்சியும் உண்டு. இதனை இம்மக்கள் முக்கு பொங்கல் எனவும் மார்கழிப் பொங்கல் எனவும் அழைக்கின்றனர். இந்த மார்கழிப் பொங்கல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் நடைபெற்று வருகிறது. 

நிகழாண்டு மார்கழிப் பொங்கல் விழாவில் பங்கேற்றோர்

இதற்காக முதல் ஆண்டே வீடுகள் தோறும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் சிறிய கலையம்(மண்ணால் செய்யப்பட்ட சிறிய பானை) கட்டி வீட்டு வாசலில் தொங்க விடப்படும். அது மறு ஆண்டு பொங்கலுக்கு எடுத்து பயன் படுத்தப்படும்.

 சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் கொடிய காலரா நோய் இப்பகுதியில் பரவியதாகவும் அதனால் நூற்றுக் கணக்கான கிராம மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனராம். வீடுகளில் இருப்போர், வயல் வெளியில் வேலைக்குச் சென்றோர் என பலரது உயிர் பிரிந்துள்ளது. அப்போது பூசாரி ஒருவர் வடக்குத்தி அம்மனுக்கு பொங்லிட்டுப் படைத்தால் இந்த காலரா உபாதை நீங்கும் என அருள் வாக்கு கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டுப் படைத்த பின்னர் காலரா நீங்கி மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT