தினம் ஒரு தேவாரம்

150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 11

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 11:

பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்புடை நிமலனை நித்திலப் பெரும் தொத்தை
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே
 

விளக்கம்:

பாணி=கை; அத்தன்=தந்தை, தலைவன்; பையரவு=படம் எடுக்கும் பாம்பு; அக்கு=எலும்பு, சங்கு என்று இரு பொருள் கொண்ட சொல்; உருத்திராக்கம் என்ற பொருள் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. விரை=நறுமணம்; பரசு=மழு ஆயுதம்;

பொழிப்புரை:

மழுப்படை ஏந்திய கையினை உடையவனும், அடியார்களுக்கு தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் பெருமானை, விடம் கொண்ட பாம்புடன், எலும்பு மாலையையும் தனது மார்பினில் நிறைந்திருக்கும் வண்ணம் பூண்டுள்ள அழகிய   மார்பினை உடையவனும், இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கியவனும், முத்துக் குவியல்கள் குன்றாக இருக்கும் வண்ணம் காட்சி அளிப்பவனும், நறுமணம் வீசும் பூஞ்சோலைகள் நிறைந்த சிரபுரம் தலத்தின் தலைவனை, தேவர்களின் பெருமானைப், புகழ்ந்து ஞானசம்பந்தர் பாடிய செந்தமிழ் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள் பரமனைப் பணிந்து வணங்கும் அடியார்களாக விளங்குவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், சிரபுரத்து இறைவனைத் தொழுதெழும்  அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். தொழுதெழும் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து பெருமானைப் பணிந்து பின்னர் எழும் அடியார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், பெருமானைப் பணியும் அடியார்கள் வினைகளுடன் பொருந்தாமல், வினைகள் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும், இரண்டாவது பாடலில் வினைகள் அத்தகைய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகும் என்றும், மூன்றாவது மற்றும் எட்டாவது ஒன்பதாவது பாடல்களில் தலைவனைக் கும்பிடும் அடியார்களை வினைகளும் வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா என்றும், நான்காவது பாடலில் ஆணிப் பொன்னாகிய இறைவனைத் தொழும் அடியார்களை  கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஐந்தாவது பாடலில் சிரபுரத்து இறைவனைத் தொழும் அடியார்கள் தங்களது செயல்களால் உயிர்க்கு வருத்தும் விளைவிக்கும் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வருத்தம் அடையாமல் இருப்பார்கள் என்றும், ஆறாவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஏழாவது மற்றும் பத்தாவது பாடல்களில் அத்தகைய அடியார்கள் தொல்லை தரும் வினைகள் நீங்கப்பெற்று தளர்வு ஏதும் இன்றி வாழ்வார்கள் என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாராயணம் செய்தும், சிரபுரத்து இறைவனை தொழுதெழுந்தும் நமது வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து  விடுபட்டு, முக்தி உலகம் சென்றடைந்து, என்றும் அழியாத பேரானந்தம் பெறுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT