தினம் ஒரு தேவாரம்

150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 6

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 6:

    ஊழி அந்தத்தின் ஒலி கடல் ஓட்டந்து இவ்வுலகங்கள் அவை மூட
    ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார் தாம்
    யாழின் நேர் மொழி ஏழையோடு இனிதுறை இன்பன் எம் பெருமானார்
    வாழி மாநகர்ச் சிரபுரம் தொழ வல்வினை அடையாவே

 
விளக்கம்:

ஓட்டந்து=ஓட்டம் தந்து; ஆழி=கடல், இங்கே அருட்கடலாக பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்தம்=முடிவு; பிரளய வெள்ளத்தில் பூமி முழுவதும் மூழ்கிய போதிலும் சீர்காழி நகரம் மிதந்தது என்றும், பெருமான் உமையன்னையுடன், ஓம் எனப்படும் பிரணவ  மந்திரத்தை தோணியாக மாற்றி, இந்த தலம் வந்தடைந்து தங்கி, மீண்டும் உலகினை படைத்தார் என்று சீர்காழி தலபுராணம் குறிப்பிடுகின்றது. அப்போது சில தேவர்கள் பறவைகளாக மாறி அந்த தோணியை சுமந்தனர் என்றும் கூறுவார்கள். இந்த செய்தி அப்பர் பெருமானின் சீர்காழி பதிகத்தில் (4.82.1) குறிப்பிடப் படுகின்றது. வண்மை=வள்ளல் தன்மை; கால்=நீர், இங்கே கங்கை நதி; கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பண்பினை வள்ளல் தன்மை என்று அப்பர் பிரான் வியந்து பாடுகின்றார். பகீரதனின் தவத்திற்கு இறங்கி, தனது எல்லையற்ற அருளினை கொடையாக வழங்கி, கங்கை நதியைத் தாங்கினார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானுக்கு ஆளாகி, அவனுக்கு திருத்தொண்டு புரிவதைத்  தவிர்த்து உலகத்து உயிர்கள் செய்யக் கூடிய காரியம் வேறு யாது உள்ளது என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.    

    பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதமெல்லாம்
    நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர் மதியம்
    கால் கொண்ட வண்கைச் சடை விரித்தாடும் கழுமலவர்க்கு
    ஆள் அன்றி மற்றும் உண்டோ அந்தண் ஆழி அகலிடமே    
 
    
இதே தகவல், பறவைகள் தோணியை சுமக்க, அந்த தோணி வந்தைடையும் வண்ணம்  உயர்ந்து நின்ற தலம் தோணிபுரம் என்று ஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றினில் (3.100.9) சொல்லப் படுகின்றது. வெல்பறவை=வெற்றி கொள்ளும் தன்மை உடைய கருடன்; திருமாலின் கொடியினில் கருடனின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது என்ற தகவல் இங்கே  சொல்லப் பட்டுள்ளது. பல் பறவைக் படியாய்=பல பறவைகள் சேர்ந்து ஓருருவம் கொண்டது போன்று விரைந்து மேலே பறந்து சென்ற அன்னம்; பிரமனும் திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் மாறி பெருமானின் முடியையும் அடியையும் தேடிக் கொண்டு வெகு தூரம் சென்ற பின்னரும் தங்களால் காண முடியாததால் வருந்தி, தங்களது பயணத்தை விட்டொழிந்தார்கள் என்று கூறும் சம்பந்தர், அவ்வாறு நீண்ட பெருமான் தனது சிந்தையிலும் தோணிபுரத்திலும் இடம் பெற்றுள்ளார் என்று கூறுகின்றார்.      

    வெல் பறவைக் கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும்
    பல் பறவைப் படியாய் உயர்ந்தும் பன்றியதாய்ப் பணிந்தும்
    செல்வற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
    தொல்பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே    

பொழிப்புரை:

ஊழி முடிவினில் பேரொலியுடன் பொங்கி வந்த கடல் அலைகள் உலகத்தினை மூடிய போது, அச்சம் கொண்டு ஓடி வந்த தேவர்கள், எந்தை பெருமானே, கருணைக் கடலே நீர் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பெருமானிடம் சரண் அடைந்தனர். அப்போது  பெருமான், அந்த ஊழி வெள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் வண்ணம், சீர்காழி நகரத்தினை உயரச் செய்தவர் பெருமான். அந்த தலத்தினை பிரணவ மந்திரமாகிய தோணியில்  பெருமானும் பிராட்டியும் அமர்ந்து சென்றடைந்த போது தேவர்கள் பறவைகள் வடிவில், அந்த தோணியுடன் சீர்காழி புகுந்தனர். யாழைப் போன்று இனிய மொழியினை உடைய பிராட்டியுடன் இனிதாக  அமர்ந்துள்ள பெருமான், இன்பமே வடிவமாக உள்ளார். அத்தகைய பெருமானார் வாழும் சிரபுரம் நகர் சென்றடைந்து பெருமானைத் தொழுதெழும் அடியார்களை கொடிய வினைகள் அணுகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT