தினம் ஒரு தேவாரம்

138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 9

7th Sep 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 9:

    மங்கு நோயுறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்
    செங்கண் மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா
    வெங்கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்
    கொங்கு உலாம் வளம் பொழில் கோடிகாவு சேர்மினே
  

விளக்கம்:

நோய்=உடலில் ஏற்படும் நோய்கள்; பிணி=பிறவிப்பிணி; மால்=பெருமை; கொங்கு=நறுமணம்; மால் என்ற சொல்லுக்கு பெரிய என்ற பொருளும் பொருந்தும்.

ADVERTISEMENT

பொழிப்புரை:

உடலைப் பற்றி உடலின் வலிமையை மங்கச் செய்யும் நோய்களுக்கு காரணமாக உள்ள வினைகளையும், உயிரினைப் பற்றி மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுக்கவைக்கும் வினைகளையும், ஒருங்கே அழித்துக் கொள்வதற்கு உரிய வழியை சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவந்த கண்களை உடைய திருமாலும் திசைமுகன் என்று அழைக்கப்படும் பிரமனும், கடிய முயற்சி செய்தும் திருவடியையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், கோபத்தினால் சிவந்த கண்களை உடையதும் பெருமை உடையதும் ஆகிய   எருதினை வாகனமாக உடையவனும், சிறந்த வேதியனும் ஆகிய பெருமான் விரும்பும் ஊரும் நறுமணமும் வளமும் உலவும் சோலைகள் நிறைந்த ஊரும் ஆகிய கோடிகா சென்று அடைந்து பெருமானை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.     

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT