தினம் ஒரு தேவாரம்

140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 11

2nd Oct 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 11:

    விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரைத்
    தளம் கொண்டதொர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
    துளங்கில் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர் என்றும்
    விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே

விளக்கம்:

ADVERTISEMENT

விகிர்தன்=ஏனையோரிலிருந்து மாறுபட்ட சாமர்த்தியம் உடையவன். தக்கனது சாபத்தினால் நாளுக்கு ஒரு பிறையாக குறைந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனைக் காப்பாற்றுவார் எவரும் இல்லாத நிலையில், சந்திரன் பிரமனை அணுகி தான் பிழைக்கும் வழி யாது என்று கேட்டபோது, பிரமன் சிவபெருமான் ஒருவரே தக்கனது சாபத்திற்கு மாறான வழி சொல்லும் வல்லமை படைத்தவர் என்று கூற, சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். அந்த ஒற்றைப் பிறையினைத் தனது சடையில் அணிந்து கொண்ட பெருமான்  சந்திரனை அழிவிலிருந்து காத்ததை உணர்த்தும் வண்ணம், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவன் என்று பொருள் பட விகிர்தன் என்று சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.  தளம்=இடம்; துளங்குதல்=நடுக்கம் கொள்ளுதல், அச்சப் படுத்தல், தளர்வடைதல் என்று பலபொருள்கள் உள்ளன. சோர்வு அடையாமல் என்றும் வளத்துடன் திகழும் தமிழ் என்றும்,   அச்சம் நடுக்கம் சோர்வு ஆகியவற்றை நீக்கும் தமிழ்ப் பாடல்கள் என்றும் இருவகையாக பொருள் கொள்ளலாம். உயர் விண் என்று கூறியமையால், விண்ணுலகத்தை விடவும் உயர்ந்த இடத்தை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாகின்றது. அத்தகைய இடம் சிவலோகம் ஒன்று தானே.              
 
பொழிப்புரை:

தனது சடை மேல் பொலிந்து விளங்கும் பிறைச் சந்திரனை உடையவனும், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவனும் ஆகிய வியலூர் இறைவனை, புகலி நகரினைத் தனது இடமாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞன் ஞானசம்பந்தன் சொன்ன, என்றும் வளமுடன் விளங்கும் தமிழ்ப் பாடல்களை பாடி இறைவனைத் தொழுது புகழ்ந்து போற்றும் அடியார்கள், நிலையான புகழோடு இம்மையில் வாழ்ந்து, மறுமையில் உயர்ந்த சிறப்பு வாய்ந்த சிவலோகம் அதனைத் தனது இடமாகக் கொண்டவர்களாக விளங்குவார்கள்.

முடிவுரை;

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்று குறிப்பிட்டு, பாம்பு, கங்கை நதி, சந்திரன் ஆகியோர் தம்மிடையே உள்ள பகையை மறந்து சடையில் உறைவதாகவும் அந்த காட்சியைக் கண்டு தலைமாலையில் உள்ள தலை  நகைப்பதாகவும் நகைச்சுவை உணர்வு தோன்ற ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், பல திருவிளையாடல்கள் புரிந்து இருபத்தைந்து மூர்த்தங்களாகவும் அறுபத்துநான்கு மூர்த்தங்களாகவும் விளங்கும் நிலை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் பலி கேட்டுச் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு முனிவர்களின் போக்கினை மாற்றி அருள் புரிந்தமை உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் அடியார்கள் தொழ பிச்சையேற்கும்  பெருமான் என்று குறிப்பிட்டு இன்றும் பெருமான் பிச்சை ஏற்று உலகெங்கும் திரிகின்றான் என்றும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்ற செய்தி குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில் தன்னை தியானிக்கும் உயிர்களுக்கு அந்த தியானத்தின் பயனாக இறைவன் விளங்கும் நிலை குறிப்பிடப்பட்டு இறைவனை நாம் தியானித்து பயனடைய வேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறைவனை நோக்கி தியானம் செய்த  அர்ஜுனன் பெற்ற பயன் ஆறாவது பாடலில், முந்தைய பாடலில் அடங்கிய செய்திக்கு எடுத்துக்காட்டாக சொல்லப் படுகின்றது. ஏழாவது பாடலில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாக விளங்கி சர்வ வியாபியாக இறைவன் இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாடல்கள் இராவணன், பிரமன் திருமால் ஆகியோர் தமது செருக்கு நீங்கி வழிபட்ட போது இறைவன் அவர்களுக்கு அருளிய தன்மை குறிப்பிடப்பட்டு, செருக்கு ஏதுமின்றி இறைவனை நாம் வழிபடவேண்டும் என்று சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் தவறான உரைகளை பொருட்படுத்தாமல் பெரியோர்கள் இருப்பார்கள் என்று குறிப்பிட்டும், இந்நாளில் மாற்று மதத்தவர்கள் பெருமானைக் குறித்து சொல்லும் இழி சொற்களை நாம் பொருட்படுத்தாமல், சிவபெருமானைத் தொடர்ந்து தொழவேண்டும் என்றும் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏனையோரிலிருந்து எவ்வாறு இறைவன் மாறுபட்டவன் என்று கடைப்பாடலில் உணர்த்தும் சம்பந்தர், இந்த பதிகத்தை  ஓதி இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். வியலூர் விகிர்தனின் வித்தியாசமான அருட்குணங்களை அறிந்து கொண்டு, பெருமானை  போற்றி  வணங்கி, இம்மையில் புகழுடன் வாழ்ந்து மறுமையில் சிவலோகம் சென்று சேர்வோமாக.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT