தினம் ஒரு தேவாரம்

135. மன்னியூர் இறை  - பாடல் 4

31st Jul 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 4:

    பத்தர் ஆயினீர்
    அத்தர் அன்னியூர்
    சித்தர் தாள் தொழ
    முத்தர் ஆவரே
    

விளக்கம்:

அத்தர்=தந்தை; சித்தர்=அடியார்களின் சித்தத்துள் நிலைத்து நிற்பவர் என்றும் சித்திகளைத் தருபவர் என்றும் சித்திகளை புரிபவர் என்றும் பல விதமாக பொருள் கொள்ளலாம். சித்தர் என்றதும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதி பிராகாரத்தில் துர்க்கை சன்னதிக்கு அருகே உள்ளே எல்லாம் வல்ல சித்தர் சன்னதி, நமது நினைவுக்கு வருகின்றது. அபிடேக பாண்டியனின் ஆட்சி காலத்தில், எல்லாம் வல்ல சித்தராக பெருமான் தோன்றி மதுரை மாநகரில்  திருவிளையாடல் புரிந்தமை, பரஞ்சோதி முனிவரால், திருவிளையாடல் புராணத்தில்  எல்லாம் வல்ல சித்தர் படலம் என்ற படலத்தில் விவரமாக சொல்லப் படுகின்றது. காதினில் வெள்ளிக் குண்டலங்களும், மார்பினில் ஸ்படிக மற்றும் உருத்திராக்க மாலைகள் அணிந்து, திருமேனி எங்கும் திருநீறு பூசியவராக, கையில் தங்கப் பிரம்பும் மழு ஆயுதமும் தாங்கி, கோவண ஆடையும் புலித்தோலும் அணிந்து, ஜடாமகுடதாரியாய், யாவரையும் மயக்கும் புன்முறுவலுடன் சித்தர் வேடத்தில் ஆலவாய் திருக்கோயிலில் பெருமான் ஒருநாள் காணப்பட்டார். இடையிடையே நான்கு வீதிகள் கூடும் இடங்களில் சென்று, வீதியிலும் மாளிகை வாயில்களிலும் அவர் செய்த சித்து வேலைகளைக் காண மக்கள் கூட்டமாக திரண்டனர். திடீரென அங்கிருந்து மறைந்தும், வேறொரு இடத்தில் தோன்றியும் பல அதிசயங்கள் அவர் நிகழ்த்தினார். இளைஞரை முதியவராக மாற்றியும், முதியோரை இளைஞராக மாற்றியும், பிறவியிலே ஊனமடைந்த பலருக்கும் கண் பார்வை அருளியும், பேசும் சக்தி அளித்தும், அவர்களது காதுகளை கேட்கவைத்தும், ஏழைகளை  செல்வந்தராக மாற்றியும், செல்வந்தர்களின் செல்வத்தை மறைத்தும், எட்டிப் பழங்களை இனிப்பாக மாற்றியும், வைகை நதியில் வெள்ளம் பெருக்கியும் பின்னர் அந்த வெள்ளத்தை தணித்தும், பட்ட மரத்தினை பூக்கச் செய்தும், கூன் உடையவர்களது கூனினை நிமிர்த்தியும், பல பொருட்களை தங்கமாக மாற்றியும், தன்னிடம் இருந்த கோல் அந்தரத்தில் தொங்குமாறு செய்தும், அந்தரத்தில் தொங்கிய கோலின் மேல் ஒரு ஊசியினை நட்டு அந்த ஊசியின் மீது தனது கால் பெருவிரல் வைத்து நடனமாடியும், விண்ணில் தாவி மேகத்தினை பிழிந்து நீரினை வெளிக்கொணர்ந்தும், பகலை இரவாக மாற்றியும், இரவினை பகலாக மாற்றியும், பல சித்து வேலைகளைச் செய்த அவரை அரண்மனைக்கு அழைத்து வர மந்திரிகளை மன்னன் அனுப்பினான். சித்தரை அழைக்கச் சென்ற மந்திரி மற்றும் சேவர்களும் சித்தரின் விளையாட்டுகளில் மயங்கி மெய்மறந்து நின்றனர். சிறிது நேரத்தில்  சுயநினைவுக்கு வந்த அவர்கள் அரண்மனைக்கு அழைத்து வருமாறு மன்னன் தங்களை அனுப்பியதை சொன்னார்கள். அதற்கு சித்தர், மன்னனால் தனக்கு ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்றும், மன்னனுக்கு தன்னிடம் ஆகவேண்டிய காரியம் ஏதேனும் இருந்தால் தன்னை வந்து காணலாம் என்று தெரிவித்தார். மந்திரி மூலமாக இந்த செய்தியை அறிந்த மன்னன், தானே அவரை நாடிச்சென்றான். இதனிடையில் சித்தர் ஆலவாய் திருக்கோயிலில் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு பணிந்து வணங்கிய மன்னன்,  தன்னிடம் இருந்த கரும்பினை கல்யானை உண்ணுமாறு சித்து வேலை செய்ய முடியுமா என்று கேட்டான். உடனே கல்யானையை சித்தர் பார்க்க, அந்த யானை உயிர் பெற்று பிளிறியதும் அன்றி, மன்னனின்  கையில் இருந்த கரும்பையும் பிடுங்கித் தின்றது. மீண்டும் சித்தர்  யானையைப் பார்க்க, அந்த யானை மன்னன் கழுத்தினில் இருந்த முத்துமாலையை எடுத்து விழுங்கியது. யானையின் செயலால் மன்னன் மிகுந்த கோபம் கொண்டதை கவனித்த காவலர்கள், யானையை இயக்கிய சித்தரை அடிக்க நெருங்கினார்கள். அப்போது சித்தர் புன்னகையுடன் நில்லுங்கள் என்று கூற அடிக்க வந்த அனைத்து காவலர்களும் சிலை போல் அசைவின்றி நின்றுவிட்டனர்.  திகைத்து நின்ற பாண்டிய மன்னன் சித்தரை வண்ணகி, தனக்கு புத்திரப்பேறு வாய்க்க அருள் புரியுமாறு வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்றார். பின்னர் சித்தர் மீண்டும் யானையை பார்க்க யானை அவரது எண்ணத்தினை புரிந்து கொண்டு மன்னனின் முத்துமாலையை திருப்பிக் கொடுக்க மன்னனும் அதனை மகிழ்வுடன் அணிந்து கொண்டான்.  சித்தர் மறைய யானையும் முன்போன்று கல் யானையாக மாறியது. மன்னனுக்கும் சிலநாட்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.                          

ADVERTISEMENT

பொழிப்புரை:

இறைவனிடம் அன்பு கொண்டவர்களே, நம் அனைவர்க்கும் தந்தையாக விளங்கும் பெருமான் அன்னியூர் தலத்தில் வீற்றிருக்கின்றான். எதையும் செய்யவல்ல சித்தராக விளங்கும்  பெருமானின் திருவடிகளைத் தொழுது, வினைகளிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைவீர்களாக.  
  

ADVERTISEMENT
ADVERTISEMENT