தினம் ஒரு தேவாரம்

149. துளி மண்டி உண்டு நிறம் - பாடல் 2

23rd Dec 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 2:

    பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
    அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
    உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்
   தெருவத்தில் வந்து செழு முத்து அலைக்கொள் திருமுல்லைவாயில் இதுவே

விளக்கம்:

ADVERTISEMENT

பருவம்=தகுந்த சமயம்; உயிர்கள் இறைவனால் ஆட்கொள்ளப்படுவதற்கு தகுந்த சமயம்; இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று குருவின் திருவருளால் சிவஞானம் வளர்ந்து, பழமல பற்றுகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, சிற்றறிவு தீர்ந்து, இறைவனின் திருவடிகளைச் சென்று சாரும் பக்குவம் வரப்பெறும் தருணம்;

ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலையே, அதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது நோக்கும் நிலையே, இருவினையொப்பு எனப்படும். ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் என்று சேக்கிழார் இந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அரவத்தொடு அங்கம் அவை கட்டி என்ற தொடர் பாம்பினையும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது உடல்களையும் தனது தோளில் கங்காள வேடராய் தாங்கியதை குறிக்கின்றது என்பது ஒரு விளக்கம்.
    
பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை  உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள்.

இவ்வாறு மலபரிபாகம் நிகழ்ந்து, இருவினையொப்பு நிலை ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள்.   அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி,  மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியும். இவ்வாறு  பக்குவப்பட்ட உயிர்களுக்கு தக்க தருணத்தில் வந்து உதவி செய்து முக்தி நிலை அளிப்பதையே பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பண்பன்=பண்பினை உடையவன். அரவத்தொடு அங்கம்=தனது திருமேனி முழுவதும் பாம்பினை உடையவன்; கையினில் கங்கணமாக, தோளில் ஆபரணமாக, இடையினில் கச்சாக, காலினில் சலங்கையாக, கழுத்தினில் அணியாக, தலைக்கு மாலையாக பல இடங்களிலும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள கோலத்தினை அருளாளர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். அரவிக்க=ஒலிக்க; புகழ்ந்து பேசப்பட; உருவத்தில் மிக்க=பெரிய அளவினில்;  தெருவம்=தெருக்கள்; ஓதம்=அலைகள்;

பயனுற்ற பண்பன் என்ற தொடருக்கு, பக்குவம் அடைந்த உயிர்களின் பக்குவத்திற்கு பரிசாக, தன்னைப் போன்று எண்குணங்கள் உடையவர்களாக மாற்றும் இறைவன்  என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த விளக்கம் நமக்கு அப்பர் பிரான் அருளிய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.98) கடைப் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன, எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.

    நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
    ஆவா என்று எமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய
         அனலாய் நீண்ட
    தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
    கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண்                 குணத்துளோமே

இறைவன் உயிர்கள் உய்யும் வழியினை அடைவதற்காக அளித்துள்ள முப்பத்தாறு தத்துவங்களை முறையாக பயன்படுத்தி, சிவபிரானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு, சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாக வகுக்கப்படுகின்றன. அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது அவற்றின் மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதையும் உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும்.  தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார். சிவபெருமானின் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகியவை ஆகும்.             

பொழிப்புரை:

பக்குவம் அடைந்த அடியார்களுக்கு தக்க தருணத்தில் முக்தி உலகினைப் பரிசாகத் தந்து அருளும் பண்பினை உடையவனும், பிரமனைப் படைத்தவனும், பாம்புகளைத் தனது திருமேனியின் பல இடங்களிலும் பொருத்தியவனும், பலராலும் புகழ்ந்து பேசப் படுவானும் ஆகிய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். உருவத்தில் பெரியதும் ஒளி வீசும் தன்மை படைத்ததும் ஆகிய சங்குகள் மற்றும் சிப்பிகள் கடலின் அலைகளால் மோதப்பட்டு, அச்சமடைந்து தங்களின் உள்ளே இருக்கும் செழுமையான முத்துக்களை வெளிக்கொணர்ந்து தள்ளும் தெருக்களை உடைய தலம் திருமுல்லைவாயில் ஆகும்.      

 

ADVERTISEMENT
ADVERTISEMENT