தினம் ஒரு தேவாரம்

138. இன்று நன்று நாளை நன்று - பாடல் 1

30th Aug 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பின்னணி:

பரத முனிவரின் மகளாக வளர்ந்த பார்வதி தேவியை பெருமான் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட திருத்துருத்தி, திருமணஞ்சேரி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி ஆகிய நான்கு தலங்கள் சென்று பெருமானை வணங்கி தேவாரப் பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அதன் பின்னர் கோடிகாவு தலம் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. சிகாமணி=தலையின் மீது சூடிக் கொள்ளும் மணி; தங்களது தலையின் மீது சூடிக் கொள்ளும் மணியினைப் போன்று உயர்ந்தவனாக தேவர்களால் இறைவன் கருதப் படுகின்றான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. பருக்கோடு=பருத்த கொம்பு; கருக்கோடி=பிறவியின் எல்லை; கஞ்சனூர் இறைவனைத் தொழும் அடியார்கள் பிறவிக்கடலின் எல்லையினைக் கடந்து வீடுபேறு அடைவார்கள் என்று இங்கே கூறப்படுகின்றது. ஞானசம்பந்தர் கஞ்சனூர் இறைவனைக் குறிப்பிட்டு அருளிய பதிகம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.    

    திருக்கோடிக்காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை
    எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்து வெள்ளேனப்
    பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல்மாலைகள் பாடிக்
    கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழச் சென்றார்

ADVERTISEMENT

இந்த தலம் தற்போது கோடிகாவல் என்று அழைக்கப் படுகின்றது. மூன்று கோடி முனிவர்கள் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் அடைந்தமையால் கோடிகா என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. கோடிக்கணக்கான முனிவர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து காத்தமையால் கோடிகாவு என்று அழைக்கப்பட்டது போலும். இந்த தலம் கும்பகோணம் தலத்திற்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறை தலத்திற்கு மேற்கே 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கும்பகோணம் நகரத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது. மயிலாடுதுறை கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்த தலம் உள்ளது. இறைவனின் திருநாமம், கோடிகா ஈச்வரர்; இறைவியின் திருநாமம்=வடிவம்மை. அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.  

பாடல் 1:

    இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

பொன்றுகின்ற=உறுதியாக அழிந்துபடும்; விரிபுனல்=விரிந்த பரப்பினை உடைய நீர்ப்பெருக்கு, கங்கை நதி; போகவிட்டு=மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகில் வாழும் தன்மையை ஒழித்துவிட்டு; போதுமின்=செல்வீர்களாக, அழியாத ஆனந்தத்தைத் தரும் முக்தி உலகுக்கு செல்வதை; தயங்கு=விளங்கும்; மின் தயங்கு=மின்னலை போன்று மிகுந்த ஒளிவீசும்; இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது என்றும் வரப்போகும் நாட்களும் மிகவும்    இன்பம் பயப்பதாக இருக்கும் என்று உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து இருக்கும் தன்மை  இங்கே குறிப்பிடப் படுகின்றது.      

பொழிப்புரை:

என்றோ ஒரு நாள் அழியக்கூடிய இந்த உடலினை நிலை என்று எண்ணி, உடல் தரும் பல் விதமான இன்பங்களில் ஆழ்ந்து, இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது  என்றும் இனி வரப்போகும் நாட்களும் இன்பம் பயப்பவையாக இருக்கும் என்று நினைத்து உடல் தரும் சிற்றின்பங்களை இரசித்து வாழும் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு   இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழும் முக்திநிலையினை பெறுவதற்கு, உலகத்தவரே நீங்கள் விரும்பி வருவீர்களாக. மின்னல் போன்று மிகுந்த ஒளியுடன் திகழும் சோதி வடிவினனும், வெண்மையான பிறைச் சந்திரன் விரிந்து பரந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி மற்றும் கொன்றை மலர்கள் ஆகியவற்றை நெருக்கமாக தனது சடைமுடியில் வைத்துள்ள பெருமான் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி வழிபடுவீர்களாக.      

 

ADVERTISEMENT
ADVERTISEMENT