பாடல் 11:
விண்ணுலாம் விரிபொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலி கழல் ஆடுவர் அரிவையொடு உறை பதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணுலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே
விளக்கம்:
விரை மணல்=மகரந்த தாதுக்கள் படிந்த மணல்; உறைபதி என்று ஒருமையில், இந்த இரண்டு தலங்களையும் சம்பந்தர் குறிப்பிடுவதால், இந்த இரண்டு தலங்களையும் இணைத்து ஒரே தலமாக சம்பந்தர் கருதினார் என்பது நமக்கு புலனாகின்றது. ஒண்ணுலாம்=ஒள் உலாம், ஒளி பொருந்திய
பொழிப்புரை:
விண்ணளவு உயர்ந்து வளர்ந்த செழிப்பான சோலைகளை உடையதும், பூக்களின் மகரந்த தாதுக்கள் படர்ந்திருப்பதால் நறுமணம் வீசும் மணல் பரப்பினை உடையதும் ஆகிய துருத்தி மற்றும் வேள்விக்குடி தலங்களில், ஒளிவீசி ஒலிக்கும் கழல்கள் அணிந்த பாதங்களுடன் நடமாடும் பெருமான் பார்வதி தேவியுடன் உறைகின்றார். அத்தகைய பெருமானை குறித்து, அனைவரும் சென்றடையும் புகலி (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரில் அவதரித்த, அருமறைகள் அறிந்த ஞானசம்பந்தன் சொன்ன பாடல்களை, பண்ணுடன் பொருந்திய அருமையான தமிழ் பாடல்களை பாடியும் ஆடியும் பெருமானின் புகழினை குறிப்பிடும் அடியார்களை வீணான பழிகள் வந்தடையா.
முடிவுரை:
வேள்விக்குடி மற்றும் துருத்தி ஆகிய இந்த இரண்டு தலங்களும் பெருமானின் திருமணத்துடன் தொடர்பு கொண்டதாக கருதப்படுவதால், இந்த பதிகத்தினை மனம் ஒன்றி ஓதும் அடியார்களின் இல்லங்களில் திருமண நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெறும் என்று நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு தலங்களில் உறையும் பெருமான் மற்றும் பிராட்டியின் அழகான தோற்றங்களை நேரில் சென்று கண்டு களித்து, பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் பதிகங்கள் பாடி, பெருமானைத் தொழுது வணங்கி, இம்மையில் பழி பாவங்கள் அற்றவர்களாக வாழ்ந்து, மறுமையில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று அவனது திருவடிகளுடன் இணைந்து வாழ்வோமாக.