தினம் ஒரு தேவாரம்

137. ஓங்கிமேல் உழிதரு  - பாடல் 10

28th Aug 2019 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 10:

    அயம் முக வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும்
    நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
    கயல் அன வரி நெடும் கண்ணியொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வியன் நகர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

விளக்கம்:

ADVERTISEMENT

அயமுக வெயில்=கொடிய வெய்யில்; அயம் என்ற சொல் இரும்பினைக் குறிக்கும். பழுக்கக் காய்ச்சிய இரும்பு போன்று கடுமையாக சுடும் வெய்யில் என்று பொருள் கூறுகின்றனர். நிலை=நிற்கும், வெய்யிலில் நின்று தங்களது உடலினை வருத்திக் கொள்வதை அந்த நாட்களில் சமணர்கள் தவமாக கருதினார் என்று சொல்லப் படுகின்றது. நிற்பதை இங்கே திரியும் என்று பொருள் கொள்ளுதலும் பொருத்தம். நயமிகு உரையினர்=சிரித்த முகத்துடன் நயமான இனிய வார்த்தைகள் பேசுவோர்; இந்த பாடலில்  நேரிடையாக சமணர்கள் மட்டும் புத்தர்களின் சொற்களை புறக்கணிப்பீர் என்று சம்பந்தர் கூறவில்லை என்றாலும், அவர்களின் சொற்களை நகைப்புக்கு ஏற்ற கட்டுக்கதைகள் என்று கூறியமையால், அத்தகைய கதைகளை புறந்தள்ள வேண்டும் என்று கூறுகின்றார் என்றே பொருள் கொள்ளவேண்டும்.       

பொழிப்புரை:

பழுக்கக் காய்ச்சிய இரும்பு போன்று சுடும் கடுமையான வெய்யிலில் நிற்பதை தவம் என்று கருதும் குண்டர்களாகிய சமணரும் புத்தரும், சிரித்த முகத்தினராக நயமான வார்த்தைகள் பேசி  உண்மையல்லாத, நகைப்பினை  உண்டாக்கும் பல சரிதங்களை உரைத்து மக்களை திசைதிருப்ப முயற்சி செய்வார்கள். அவர்களது சொற்களை பொருட்படுத்தாது, மீன் போன்று அழகிய நீண்ட கண்களை உடைய பார்வதி தேவியுடன் பகலினில் துருத்தி தலத்தில் உறையும் பெருமானை வழிபாட்டு பயன் அடைவீர்களாக. இவ்வாறு பகலினில் துருத்தியில் உறையும் பெருமான் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT