தினம் ஒரு தேவாரம்

111. பூங்கொடி மடவாள் - பாடல் 11

24th Oct 2018 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT


பாடல் 11:

    விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி
    ஒளி தர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனைக்
    களி தரு நிவப்பில் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன்
    அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்தில் இருப்பாரே

விளக்கம்:

விளைதரு வயல்=நல்ல விளைச்சலைத் தரும் வயல்கள்; மேதிகள்=எருமைகள்; வெயில்= சூரியன் அல்லது சூரிய வட்டம்; புலம்=நிலம், இடம்; களிதரு=களிப்பினைத் தருகின்ற; நிவப்பு=உயர்ந்த பொருள்; அளிதரு=அருளை விளைவிக்கும் 

ADVERTISEMENT

பொழிப்புரை:

நல்ல விளைச்சலைத் தரும் நிலங்களில் காணப்படும் சூரியனின் கதிர்களை போன்று பிரகாசிக்கும் பவளங்களை, தங்களது கால்களால் நிலத்தில் மேயும் எருமைகள் இடற, அந்த பவளங்கள் மேலும் ஒளியுடன் காட்சி தரும் தலமாகிய ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் அரனைக் குறிப்பிட்டு, காண்போர்க்கு உள்ளக் களிப்பினை உண்டாகும் வண்ணம் காணத்தக்க செல்வத்தினை உடைய சீர்காழி தலத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன் போற்றி உரைத்ததும், பெருமானின் அருளினைப் பெறுகின்ற பயனை விளைவிப்பதும் ஆகிய பாடல்கள் பத்தையும் கற்று முறையாக ஓத வல்ல அடியார்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பார்கள். 

முடிவுரை:

இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் மற்றும் சான்றோர்களை  குறிப்பிட்டு அவர்களது உயர்ந்த தன்மைகளையும், அவர்கள் எவ்வாறு பரமனைப் போற்றி வாழ்ந்தார்கள் என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார். நாமும் அத்தகைய குணங்களை வளர்த்துக் கொண்டு, அனைவர்க்கும் நன்மை தரும் செயல்களை செய்தவாறு இறைவனை முக்காலமும் போற்றி வாழ்ந்து, உய்வினை அடைவோமாக.   

ADVERTISEMENT
ADVERTISEMENT