தினம் ஒரு தேவாரம்

97. மந்திர மறையவை - பாடல் 7

23rd May 2018 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT


பாடல் 7:

    நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
    கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
    வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
    பயம் தரு மழு உடைப் பரமர் அல்லரே

விளக்கம்:

கயந்திரம்=கஜம் இந்திரன் ஆகிய இரண்டு சொற்கள் இணைந்தது. யானைகளுக்கு இந்திரன் போன்று தலைவனாக இருக்கும் யானை;, இங்கே ஐராவத யானையினை குறிப்பிடுகின்றது. பாகவதத்தில் வரும் யானை கஜேந்திரன் வேறு.
நயத்தல்=விரும்புதல்; நயந்தவர்=விரும்பி வழிபடும் அடியார்கள்;  

ADVERTISEMENT

பொழிப்புரை:

தன்னை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் செய்பவர் பெருமான். தனது நெற்றியில் கண்ணினை உடைய பெருமானை, இந்திரனும் வெள்ளை யானையும் வழிபட்டு அருள் பெற்றன. இவ்வாறு பெருமான் அருளும் திறத்தினைக் கண்டு வியக்கும் மாந்தர்கள் இறைவனைப் போற்றி புகழ்கின்றனர். அத்தகைய பெருமான் திருவெண்காடு தலத்தில் உறைகின்றார். தனது அடியார்களுக்கு அன்பராக விளங்கும் பெருமான், தன்னுடன் பகை கொள்பவகளுக்கு அச்சத்தினை ஊட்டும் மழு ஆயுதத்தை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அன்பருக்கு அன்பராகவும் பகைவர்களுக்கு அச்சமூட்டும் வண்ணமும் திகழும் அவர் மேலான தெய்வம் அல்லவா. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT