தினம் ஒரு தேவாரம்

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 7

28th May 2017 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே 

விளக்கம்

மருவும் = பொருந்தி வாழும். பூதநாயகன் என்ற சொல்லுக்கு ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் நாயகன் என்றும் பூதகணங்களுக்கு நாயகன் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். இந்த பாடலில் உள்ள சொற்கள் வேத நாயகன் என்று தொடங்கும் அப்பர் பிரானின் பாடலை (5.100.1) நினைவூட்டுகின்றன. 

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே

ADVERTISEMENT

பெண்கள் பொருந்தி வாழும் மங்கலக்குடி என்று சொல்வதற்கு ஏற்ப, அம்மையின் திருப்பாதங்களில் தங்களது மங்கல நாணை வைத்து பெண்கள் வழிபடும் வழக்கம் இந்த கோயிலில் உள்ளது. இதற்கு காரணமாக அமைந்த நிகழ்ச்சி, கர்ண பரம்பரையாக சொல்லப்படும் செவிவழிச் செய்தி, இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக பணிபுரிந்து வந்த, அருகில் உள்ள திருவியலூரைச் சார்ந்த, அலைவாணர் எனும் சிவனடியார், மக்களிடம் இருந்து வசூல் செய்த வரிப்பணத்தை எடுத்து, மன்னனிடம் அனுமதி பெறாமல் கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தினார். இதனை அறிந்த மன்னன், அமைச்சரின் தலையை சீவுமாறு ஆணை இடவே, கட்டளை நிறைவேற்றப்பட்டது. தான் இறப்பதற்கு முன், அவர் தெரிவித்த விருப்பப்படி அவரது உடல் அவரது சொந்த ஊரான திருவியலூருக்கு கொண்டுவரப் பட்டது. அவரது மனைவி திருமங்கலக்குடி கோயிலுக்கு சென்று அம்பிகையிடம் தனது மாங்கல்யத்தை காப்பாற்றுமாறு வேண்ட, அம்பிகை சிவனிடம் சேதி சொல்ல, இறந்தவரின் உடலும் தலையும் பொருத்தப்பட்டால் அமைச்சர் உயிர் பெறுவார் என்று வானிலிருந்து ஒரு குரல் கூறியது. அவ்வாறே செய்ய சிவன் அருளால், தூக்கத்திலிருந்து எழுவதுபோல் அலைவாணர் எழுந்தார். நடந்த அதிசயம் அறிந்து கோயிலுக்குள் சென்று கடவுள் சிலையை ஆனந்தத்தால் தழுவிக் கொண்டார். இந்த நிகழ்ச்சியால் இறைவனுக்கு பிராண நாதேஸ்வரர் என்ற பெயரும் அம்பிகைக்கு மங்களாம்பிகை என்ற பெயரும் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியால் பெண்களின் மங்கல நாண் காப்பதற்கு பிரசித்திபெற்ற தலமாக மாறிவிட்டது. இதனால் மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை என்ற தொடர் எழுந்தது. இன்றும் அம்மையின் தாளில் திருமங்கல நாண் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இறைவனுக்கும் பிராணன் தந்த பிராண வரதேஸ்வரர் என்ற பெயர் வந்தது. 

பொழிப்புரை

பெண்கள் பொருந்தி வாழ்ந்து, இறைவனை வழிபட்டு பலனடையும் தலமாக விளங்கும் திருமங்கலக்குடி தலத்து இறைவன், அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக உள்ளவன், அவன்தான் தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாகவும் விளங்குகின்றான். வேதங்கள் புகழ்ந்து ஏத்தும் நாயகனாக விளங்கும் அவன், வேதியர்களுகும் தலைவன் ஆவான். ஐந்து பூதங்களையும் அடக்கி ஆளும் அந்த தலைவன், புண்ணியமே வடிவமாக உள்ளவன். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT