தினம் ஒரு தேவாரம்

81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 4

5th Dec 2017 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

பாடல் 4:

புதியையாய் இனியையாய் பூந்தென்றால்
                                                                      புறங்காடு
பதியாவது இது என்று பலர் பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல்
                                                                      விடுத்தானோ

விளக்கம்:

தென்றால்=தென்றல் என்பதன் திரிபு; புறங்காடு=ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாடு; மதி கங்கை விதியாளன்=அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு அடைக்கலம கொடுத்து அவன் விரிந்து வளருமாறும், பரந்தும் விரிந்தும் கீழே இறங்கிய கங்கை நதியினை ஒடுக்கி தனது சடையினில் அடக்கியும் கருணைச் செயல்கள் புரிந்த தன்மை இங்கே விளக்கப் பட்டுள்ளது. உயிர் மேல் விளையாடல்=உயிரினுள் கலந்து நின்று ஆட்கொள்ளுதல். அழியும் நிலையில் இருந்த சந்திரன் வளரத் தொடங்கியது; பரந்து விரிந்து கீழே பாய்ந்த கங்கை நதி ஒடுக்கப் பட்ட பின்னர், சிறிய நதியாக சடையிலிருந்து வெளியிடப்பட்டது. இவ்வாறு சந்திரன், கங்கை ஆகிய இருவரின் நிலையையும், சிவபிரான் மாற்றிய செய்கை மதிகங்கை விதியாளன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மதியாதார்=தக்கன்; தன்னை அழைக்காமல் தக்கன் வேள்வி செய்யத் தொடங்கியபோது, முதலில் சிவபிரான் அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஆனால் வேள்வி நடந்த இடத்திற்குச் சென்ற தனது மனைவியாகிய தாட்சாயணி, இகழப்பட்ட போது, சிவபிரான் தனது அம்சமான வீரபத்திரரை அங்கே அனுப்பி, யாகத்தை அழித்தார்; யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கும் தண்டனை அளித்தார். இவ்வாறு தக்கனுக்கும் அவனைச் சார்ந்தார்க்கும் மறக்கருணை அளித்தது, நகைச்சுவையாக மதித்திட்ட என்று எதிர்மறையாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்த பாடலில் தென்றல் காற்று தூதுவனாக அனுப்பப்பட்டு, தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று தனது ஆசையினை சிவபிரானிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்துள்ளது. தென்றல் காற்றினை நாம் இதுவரை எத்தனை முறை அனுபவித்து ரசித்திருந்தாலும், அடுத்த முறை தென்றல் காற்று நமது உடலில் மீது படும்போது, தனிவிதமான புத்துணர்ச்சியை, இனிமையை நாம் உணருகின்றோம். இந்த கருத்தினை உள்ளடக்கி, புதிய, இனிய தென்றல் காற்று என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.    

ADVERTISEMENT

பொழிப்புரை:
இனிமையானதும், நறுமணம் கமழும் பூக்களின் வாசனையுடன் எப்போதும் புதியதாக உணரப்படும் தென்றல் காற்றே, ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபிரான், தன்னை மதிக்காமல் வேள்வி நடத்திய தக்கனுக்கும் அந்த வேள்வியில் பங்கு கொண்ட மற்றவர்களுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான், பழனம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் பெருமான், சந்திரனுக்கும் கங்கைக்கும் அவரவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்வு அளித்தும் (வாழ்வு வேண்டிய சந்திரனுக்கு வாழ்வு அளித்தவர்: கர்வத்துடன் பொங்கிப் பாய்ந்த கங்கை நதியை சடையில் சிறை வைத்தவர்) ஒடுக்கியும், அவர்களது போக்கினை மாற்றிய பெருமான், எனது உயிருடன் கலந்து என்னை ஆட்கொள்ளும் செயலை விட்டுவிட்டானோ? எனது வருத்தத்தை அவனுக்கு உணர்த்தி, சிவபிரான் மறுபடியும் என்னுடன் கலந்து என்னை ஆட்கொள்ளுமாறு நீ தூதுச் செய்தியை அவனுக்கு கூறவேண்டும்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT