தினம் ஒரு தேவாரம்

81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 3

4th Dec 2017 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

 

பாடல் 3:

மனைக்காஞ்சி இளம் குருகே மறந்தாயோ
                                                                   மத முகத்த
பனைக் கைம்மா உரி போர்த்தான் பலர் பாடும்
                                                                   பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ
                                                                   நிகழ் வண்டே
கனைக் குவளை மலர் கண்ணாள் சொல் தூதாய்
                                                                   சோர்வாளோ

விளக்கம்:

பனைக் கைம்மா=பனை மரத்தைப் போன்று அடியில் பெருத்தும் நுனியில் சிறுத்தும் காணப்படும் துதிக்கையை உடைய விலங்கு, யானை; 

இந்த பாடலில் குருகும் வண்டும் தூதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். முதல் இரண்டு பாடல்கள் மூலம் விடுத்த தூது பயன் ஏதும் அளிக்காத நிலையில் அப்பர் நாயகி திகைக்கின்றாள். அடுத்து வேறு எவரை அனுப்பினால் தூது பலனளிக்கும் விதமாக இருக்கும் என்று ஆராய்கின்றாள். வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து இருக்கும் குருகினைக் காணும் தலைவிக்கு, தனது துயரங்களை அருகில் இருந்த பார்த்த குருகு தூது சென்றால், தனது நிலை சரியாக எடுத்துரைக்கப்படும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. நமது அருகில் இருப்பவர்களுக்குத் தானே நமது நிலைமை முழுவதுமாகத் தெரியும். அதனால் குருகு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இரண்டாவது பாடலில் தான் சிவபிரானின் நினைவாக இருப்பதையும், தனது மனதினில் உள்ள எண்ணங்களையும் தெரிவித்த அப்பர் நாயகி, சிவபிரானின் மனதினில் ஓடும் எண்ண ஓட்டங்களைத் தான் அறிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். 

ADVERTISEMENT

சிவபிரானுக்கு சூட்டப்படும் புது மலர்களில் உள்ள தேனினை குடிப்பதற்காக, வண்டுகள் சிவபிரானின் அருகில் செல்வது அவளுக்கு நினைவுக்கு வருகின்றது. மேலும் ரீங்காரமிட்டுப் பாடும் இசைக் கலைஞர்களாகிய வண்டுகளுக்கும், நடனக் கலையில் வல்லவனான சிவபெருமானுக்கும், இருவரும் கலைஞர்கள் என்பதால் இயல்பான நெருக்கம் இருக்கும் அல்லவா? அந்த நெருக்கத்தாலும், அருகாமையில் இருப்பதாலும், சிவபிரானின் நினைவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை, வண்டுகள் அறியமுடியும் என்று நம்புகின்றாள். சிவபிரானின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொண்டால், தான் சிவபிரானின் மீது கொண்டுள்ள காதலுக்கு, இறைவனது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை உணரமுடியும் என்று நினைக்கின்றாள். அதனால் தான் வண்டுகளை அழைத்து, சிவபிரான் என்ன நினைக்கின்றார் என்று அறிந்து உரைக்குமாறு இங்கே வேண்டுகின்றாள்.       

பொழிப்புரை:

வீட்டுத் தோட்டத்தில் வளரும் காஞ்சி மரத்தில் அமர்ந்துள்ள குருகே, எனது தலைவனாகிய சிவபிரானிடம் சொல்ல வேண்டிய செய்திகள் மறக்காமல் உனது நினைவில் உள்ளனவா? சிவபெருமானுக்கு அருகாமையில் இருக்கும் வண்டே, தாருகவனத்து முனிவர்கள் ஏவிய பனை மரத்தின் தண்டு போன்று உரம் வாய்ந்த கையினைக் கொண்டதும் மதம் கொண்டதுமான யானையின் தோலை உரித்துத் தனது உடலில் போர்த்துக்கொண்ட பழனத்தானின் அனைத்து நினைவுகளையும் நீ அறிந்து எனக்கு சொல்வாயாக. குவளை மலர் போன்ற கண்களைக் கொண்ட எனது தோழி, என் சார்பாக சிவபிரானிடம் தூது சென்றவள், சிவபிரானின் அழகில் மயங்கி, தான் மேற்கொண்ட தூதினை மறந்தாள் போலும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT