தினம் ஒரு தேவாரம்

43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 9

21st Nov 2016 12:00 AM | என். வெங்கடேஸ்வரன்

ADVERTISEMENT

அஞ்சியாகிலும் அன்பு பட்டாகிலும்
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

 

விளக்கம்

அச்சம் மற்றும் அன்பு இவை இரண்டுமே ஒருவரிடத்தில் அன்பு கொள்வதற்கு காரணமாக அமைவன. இஞ்சி = மதில். குஞ்சி = தலை முடி. தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போன்று நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. பெருமான், அடுத்தவர் அச்சம் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்று இருப்பதை திரிபுரத்து நிகழ்ச்சி மூலமும், கருணையாளனாக உள்ள நிலை, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த நிகழ்ச்சி மூலமும் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

ADVERTISEMENT

உறுதியான கோட்டைகளாக விளங்கிய, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், அம்பினை எய்து அழித்தவனும், தேவர்களால் தொழப்படுபவனும், தனது சடையில் வானில் உலவும் பிறைச் சந்திரனைச் சூடியவனும் ஆகிய நின்றியூர் இறைவனை, நெஞ்சமே, நீ அவனிடத்தில் அச்சம் கொண்டேனும் அல்லது அன்பு கொண்டேனும் நினைப்பாயாக. நீ அவனை எந்தவிதமாக நினைத்தாலும் வாழ்வினில் உய்வினை அடைவாய்.

ADVERTISEMENT
ADVERTISEMENT