பித்ருதோஷ நிவர்த்தி தலம் அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 127-வது தலமாக இருப்பது..
பித்ருதோஷ நிவர்த்தி தலம் அமிர்தகடேசுவரர் கோவில், கோடியக்கரை

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 127-வது தலமாக இருப்பது கோடியக்கரை. தற்காலத்தில் இத்தலம் குழகர்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர் - அமிர்தகடேசுவரர்

இறைவி பெயர் - மையார்தடங்கன்னி, அஞ்சனாட்சி

எப்படிப் போவது?

வேதாரண்யத்தில் இருந்து அகத்தியான்பள்ளி வழியாக தெற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. வேதாரண்யத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. குழகர்கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கி அமிர்தகடேசுவரர் ஆலயத்துக்குச் செல்லலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில்
கோடியக்கரை அஞ்சல்,
வழி வேதாரண்யம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் - 614 821.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தைப் பருகிய பிறகு, மீதமிருந்த பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு அவர் ஆகாய வழியில் செல்லும்போது, அவரிடமிருந்து அமுதக் கலசத்தைக் கைப்பற்ற அசுரர்கள் முனைந்தனர். வாயுதேவன், முருகனை மனத்தால் வணங்கி அமுதக் கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக்கொண்டார்.

அமுதக் கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிராகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம், ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால், இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.

இவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுதக் கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவற்றை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுதக் கலசத்துடன் உள்ள முருகப்பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்கப்படுகிறது.

இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன்மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.

இறைவி மையார்தடங்கன்னி சந்நிதி, முன்மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்புக்காக காடுகிழாள் என்ற அம்பிகையின் சந்நிதியும் முன்மண்டபத்தில் உள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அமிர்த தீர்த்தமும், கோடியக்கரை கடலும் உள்ளன. அமிர்த தீர்த்தம் ஆலயத்தினுள் ஒரு கிணறு வடிவில் உள்ளது. மற்றொரு ஆலய தீர்த்தம் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால், சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆடி அமாவாசையிலும், தை அமாவாசையிலும் இங்குள்ள கடலில் நீராடி அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அகத்தியான்பள்ளியில் இருந்து இத்தலத்துக்கு வரும் வழியில் ராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் ராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார் என்று தல வரலாறு தெரிவிக்கிறது. அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்துக்கு வந்த சுந்தரர், கடலருகே கோவிலில் இறைவன் தனித்து இருப்பதைப் பார்தது உள்ளம் வருந்தி பாடினார்.

கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. 

முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே. 

மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 

காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. 

மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. 

அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. 

பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 

ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய கோடிக் குழகா
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 

நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே. 

பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே. 

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com