வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

ஆயுள் பெருக, பூர்வ ஜன்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்

By என்.எஸ். நாராயணசாமி| Published: 02nd November 2018 12:00 AM

 

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருபுன்கூர். இத்தல இறைவன் சிவலோகநாதரைப் பணிந்து வழிபடுவோருக்கு நோய்கள் வராது, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் பெருகும் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது.

இறைவன் பெயர்: சிவலோகநாதர்

இறைவி பெயர்: சௌந்தரநாயகி, சொக்கநாயகி

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன. இவற்றில், திருநாவுக்கரசர் அருளிய பதிகம் திருபுன்கூர் மற்றும் திருநீடூர் ஆகிய இரண்டு தலங்களுக்கும் பொதுவானது.

எப்படிப் போவது

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மீ. சென்றால், ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

ஆலய முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்

திருப்புன்கூர், திருப்புன்கூர் அஞ்சல்

சீர்காழி வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் - 609 112.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவமான திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்), ஆலய வாயிலில் நின்று சிவதரிசனம் செய்ய முயற்சிப்பார். ஆனால், நந்தி இடையே இருந்ததால் சிவபெருமானை அது மறைத்தது. மானசீகமாக ஈசனை வழிபட்டு மனம் உருகுவார். நந்தனாரின் பக்திக்கு உருகிய இறைவன், தம்மை நேராகத் தரிசனம் செய்து நந்தனார் வணங்கும் பொருட்டு, அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு பணித்து, நந்தனாருக்கு அருள் செய்து அருளிய தலம் திருப்புன்கூர்.

நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவர். அதனால், ஆலயத்துக்குள் செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். அவருக்குத் தரிசனம் கொடுக்க நந்தியை விலகச் சொல்லி, நந்தனாரின் பக்தியை உலகுக்கு இறைவன் எடுத்துக்காட்டிய தலம் இதுவாகும். எல்லா சிவன் கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். ஆனால், நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை. இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும், இத்தலத்தில் ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம், நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும்

கோவில் அமைப்பு

மூவர் பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம், ஒரு 5 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், விசாலமான திறந்த முற்றவெளி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், தலமரமும், பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய நந்தியையும் (சற்று விலகியுள்ளது) கடந்து சென்றால், உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால், உள்பிராகாரத்தில் இடதுபுறம் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் இருக்கும் சந்நிதியைக் காணலாம். அதையடுத்து, சுந்தரவிநாயகர் சந்நிதி உள்ளது. அடுத்துள்ள சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் இத்தலத்துக்குரிய தனிச்சிறப்பு பெற்ற சந்நிதியாக விளங்குகிறது. அடுத்து, சூரியனும் அக்னியும் வழிபட்ட லிங்கங்கள், ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. பிரம்மதேவனுக்காக, பஞ்ச முகங்களுடன் அமைந்துள்ள பஞ்சலிங்க மேடை மிகவும் சிறப்பான சந்நிதியாகும்.

நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால், நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புனுகுச் சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், பிட்சாடனர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.

பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றனர். இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம், அம்பாள் சௌந்தரநாயகியின் சந்நிதி தனிக்கோயிலாக வலம் வரும் வகையில், ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது

சுந்தரர் பதிகம்

ஒருமுறை, சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்துக்கு வருகை புரிந்தனர். அச்சமயம், திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம், 12 வேலி நிலம் ஆலயத்துக்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற, அரசனும் சம்மதித்தான். அதன்படி, சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி 12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று, இந்த்த் திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார்.

இந்த வரலாற்றை சுந்தரர், அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

வையகம் முற்றும் மாமழை மறந்து

வயலில் நீர்இலை மாநிலம் தருவோம்

உய்யக் கொள்கமற் றெங்களை என்ன

ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்து எங்கும்

பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்

பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டு அருளும்

செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்

செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே.

சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது, அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்த பின்பு, மற்றொருவனை தான் நடனம் ஆடும்போது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்தார். சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார்.

மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என் றேவிய பின்னை

ஒருவன் நீகரி காடரங் காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ

மணிமு ழாமுழக் கவருள் செய்த

தேவ தேவநின் திருவடி யடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே

இத்தலத்திலுள்ள நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. சுந்தரர் பாடிய இத்தல பதிகத்தில் கூறியபடி, நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து, தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணி முழக்குவதைக் காணலாம்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சிவலோகநாதர் திருபுன்கூர் சௌந்தரநாயகி சொக்கநாயகி

More from the section

முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆம்ரவனேஸ்வரர் கோவில், திருமாந்துறை
திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க புஷ்பவனநாதர் கோவில், திருப்பூந்துருத்தி
பித்ரு தோஷ பரிகாரத் தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
குழந்தைப் பேறு பெற, கல்வியில் சிறக்க கயிலாசநாதர் திருக்கோவில், அயனீச்சுரம் (பிரம்மதேசம்)