தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் - சாந்தி சண்முகம்; பக்.108; ரூ.150; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 75500 98666.
தமிழ் மண்ணில் பிறந்த நூலாசிரியர் திருமணத்துக்குப் பின்னர் கணவரோடு துபையில் குடிபெயர, வெளிநாட்டு வாழ்க்கையில் தனிமைத் துயரைப் போக்குவதற்காக இணையதளத்தில் எழுதிய தொடர் நூல் வடிவம் பெற்றுள்ளது.
துபைக்கு போனால் கைநிறைய சம்பாதிக்கலாம்; அங்கே எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கின்றன; பாலைவன பூமி... என்றெல்லாம் திரையுலகிலும், மக்களும் சொல்லக் கூடிய நிலையில், அந்த நாட்டின் இயற்கை வளங்களை, அதிசயங்களைத் தானே ரசித்து, ருசித்து எழுதியுள்ளதைப் படிக்கும்போது நாம் நினைத்தது தவறு என்ற எண்ணம் மேலோங்குகிறது.
ஹலோ துபாயா, வெல்கம் டு ஏர் அரேபியா, எஸ்.டி.டி.என்னா வரலாறு தானே?, மால்களின் ராணி, சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல், வெயிலோடு வெளையாடி, ஏனோ வானிலை மாறுகிறதே!, பாலை- மணலும் மணல் சார்ந்த இடமும், இட் ஈஸ் புர்ஜ் கலிஃபா, பண்டிகை வந்துவிட்டது!, மெதியா ராணியும் மிராக்கிள் கார்டனும், தி கிரேட் துபாய் சிக்கன், என் ஜன்னலுக்கு வெளியே, யாதும் ஊரே யாவரும் கேளிர்!, சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? என்ற 15 கட்டுரைகளின் தலைப்புகளைப் படிக்கும்போதே, அதன் உள்ளடக்கத்தின் பொருளையும் அறிய முடிகிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது.
துபை நாட்டின் இயற்கை வளங்கள், அதிசயங்கள், வழிபாட்டுத் தலங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், மெட்ரோ ரயில் சேவைகள், விமான நிலையத்தின் சிறப்புகள், அந்த நாட்டில் நம்மூர் பண்டிகைக் கொண்டாட்டங்கள்... என்று அறிந்திராத தகவல்கள் வியக்க வைக்கின்றன. சுற்றுலா நிமித்தமாக வெளிநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.