எளியநடையில் பன்னிரு திருமுறைகள் தொகுப்பு - சு.சண்முகவடிவேலு; பக்.178; ரூ.250; என்.எஸ்.பி.சண்முகா பதிப்பகம், அம்மாபேட்டை, தஞ்சாவூர் - 614 402. ✆ 93602 17344, 94867 42264.
சிவபெருமான் அருளிய திருவாக்குகளின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள். இதில் குறிப்பிடத்தகுந்த பாடல்களுக்கு விளக்கவுரை, தெளிவுரை, சிறப்புரை அளித்திருப்பதோடு அப்பாடல்கள் பாடப்பெற்ற பின்னணியையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வர் உள்பட பல்வேறு சைவ நெறியாளர்களின் வரலாறை ரத்தினச் சுருக்கமாக இந்நூல் பதிவு செய்துள்ளது.
பிறவித் தளையிலிருந்து விடுபட சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு படிகளை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது. இந்த நான்கு படிகளுக்கும் சமயக் குரவர்கள் நால்வரும் எடுத்துக்காட்டாக விளங்கினர் என்பதை இத்தொகுப்பு மிகச் சிறப்பாக எடுத்தியம்புகிறது.
தமிழ்ச் சங்கத்தின் தனிப்பெரும் தலைவனாய் இருந்து தமிழ் வளர்த்த சிவபெருமான், 'நற்றமிழ் வல்லவர்பால் நயந்து நாடினான்' என்பதை இந்நூல் உணர்த்துகிறது. உலகின் மிகப் பழைமையான சைவ சித்தாந்தத்தை அனைவரும் எளிதில் உணர்ந்து ஓதத்தக்க வகையிலும், பக்தி இலக்கியத்தின் மேன்மையை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.